ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஆதரவு: ட்ரம்புக்கு பின்னடைவு
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக சுமார் 215 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆளும் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது.

Published : June 4, 2026 at 11:00 AM IST
வாஷிங்டன்: ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிகளவில் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 28- ஆம் தேதி அன்று ஈரானின் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி காமேனி, அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுப்படைகளால் கொல்லப்பட்டார். அவருடன் அவரது குடும்பத்தினர் பலரும் உயிரிழந்தனர். இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வெளி தாக்குதல்களை நடத்தினர். இதில் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் ஆலைகள் கடுமையாக சேதமடைந்தனர். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான தளங்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
மேலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தாலும் தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ஈரானில் உள்ள அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்மொழிந்து சபையின் வெளியுறவுக் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் மூலம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். 215 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு எதிராக 208 பேர் வாக்களித்திருந்தனர்.
| இதையும் படிங்க: இந்தியா-நேபாளம் கூட்டுப் பயிற்சித் திட்டம்- நேபாளத்தை சேர்ந்த 25 நிறுவனங்களுக்கு சென்னையில் பயிற்சி |
இது குறித்து ஜனநாயகக் கட்சியினர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமெரிக்க மக்களின் சார்பாக இது ஒரு உரத்த மற்றும் தெளிவான செய்தி. ஈரானில் அவர் விரும்பி தொடங்கிய செல்வாக்கற்ற மற்றும் சட்டவிரோதமான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சிக்கு எதிரான தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

