ETV Bharat / international

அமெரிக்கா மீது மோடி வருத்தத்தில் இருப்பது உண்மைதான் - எம்.பி.க்கள் கூட்டத்தில் பகிரங்கமாக சொன்ன அதிபர் டிரம்ப்

தனது தலைமையிலான அரசின் வரிக் கொள்கை அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற பொருளாதார நிலையை களையவும் அவசியம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார்.

2020 இல் இந்திய பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்
2020 இல் இந்திய பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 11:43 AM IST

2 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: இந்திய பிரதமர் மோடியுடன் தமக்கு நல்ல நட்புறவு இருந்தாலும், அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக அவர் எங்கள் மீது கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார் என்பது உண்மைதான் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரிகள், நாட்டின் பாதுகாப்புக்கும் வருவாய்க்கும் முக்கிய ஆதாரம் என்று கூறிய டிரம்ப், நாட்டில் நிலவிவரும் சீரற்ற பொருளாதார நிலையை களையவும் இந்த நடவடிக்கை அவசியம் என்றும் தமது அரசின் இந்த செயலை நியாயப்படுத்தினார்.

அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்ற நிகழ்ச்சி டிரம்ப் - கென்னடி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சுமார் 80 நிமிடங்கள் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக உறவு, வரி விதிப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.

குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியுடான தமது நட்புறவு பற்றி தமது உரையில் குறிப்பிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமக்கும் நல்ல நட்புறவு நீடிப்பதாக டிரம்ப் கூறினார். அதேசமயம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதன் காரணமாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்கள் மீதான வரி உயர்த்தப்பட்ட விஷயத்தில் மோடிக்கு வருத்தம் இருக்கதான் செய்கிறது எனவும் டிரம்ப் பேசினார்.

"இந்தியா தற்போதும் அமெரிக்காவிடம் இருந்து 68 அப்பாச்சி வகை ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது. அந்த அளவு எனக்கும், மோடிக்கும் இடையேயான நட்புறவு நல்ல முறையில் நீடிக்கிறது. இருப்பினும் இந்திய ஏற்றுமதிப் பொருள்களுக்கு எனது தலைமையிலான அமெரிக்க அரசு விதித்துள்ள அதிகபடியான வரியால் மோடி எங்கள் மீது வருத்தத்தில் இருக்கிறார் என்பதும் உண்மைதான். அதேசமயம் இந்த வரி விதிப்பின் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது" என்று டிரம்ப் கூறினார்.

இதையும் படிங்க: வெனிசுலாவை இனி நாங்கள் ஆட்சி செய்வோம்' - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

மோடி குறித்து இவ்வாறு பேசிய டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை கேலி செய்தார். " 'டொனால்ட் நம்மிடையே ஓர் ஒப்பந்தம் உள்ளது. அதன்படி மருந்துகளின் விலையை 200 சதவீதம் அல்லது அதற்கு மேல் உயர்த்த விரும்புகிறேன். அதற்கு நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளுங்கள். ஆனால் இதனை தயவுசெய்து மக்களிடம் மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்று செஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்' என்று மேக்ரான் என்னிடம் கூறியதாக அம்பலப்படுத்தி டிரம்ப், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் ஒவ்வொரு நாடும் இப்படிதான் செய்ய விரும்புகின்றன என்றார்.

அமெரிக்காவின் அதிரடி வரி உயர்வு தொடர்பாக வெளிநாட்டுத் தலைவர்களுடனான தமது உரையாடலை நினைவுகூர்ந்த டிரம்ப், வரி வருவாயை நாட்டின் வளர்ச்சிக்காக தீவிரமாக பயன்படுத்துவதை நியாயப்படுத்தினார்.

"அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளிடமிருந்து நான் திரும்ப கேட்பதைவிட 42 மடங்கு அதிகமான வரியை அவற்றின் மீது விதிக்கிறேன்" என்று கூறியதாக டிரம்ப் பேசினார்.

அமெரிக்காவின் வர்த்தக கொள்கையை பாதுகாப்புத் தயார் நிலையுடன் தொடர்புப்படுத்தி பேசிய டிரம்ப், வரிகளால்தான் நமக்கு (அமெரிக்கர்களுக்கு) தேசியப் பாதுகாப்பு உள்ளது எனவும் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு மருத்துகளின் விலைகள் தொடர்பாக பேசிய டிரம்ப், அமெரிக்கா கொடுத்த அழுத்தமே பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது மருந்துகளின் விலையை மறுபரிசீலனை செய்ய வைத்தது என்றார்.

வரிகள் வாயிலாக ஏற்கெனவே நாம் கணிசமான வருவாயை ஈட்டி வருவதாக குறிப்பிட்ட டிரம்ப், இதன் பயனாக, 650 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் நமக்கு விரைவில் கிடைக்கப் போகிறது என்றார்.

அமெரிக்காவின் வர்த்தக கொள்கையின் செயல்திறன் குறித்த விமர்சனங்களை நிராகரித்த டிரம்ப், சரியான அதிபர் இருந்தால், இக்கொள்கை நல்லதுதான் என்று தமது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.