ETV Bharat / international

பென்டகனின் விதிகளுக்கு கட்டுப்படாத ‘ஆந்த்ராபிக்’ ஏஐ நிறுவனம் - தடை விதித்து நெருக்கடிக்கு தள்ளிய டிரம்ப்

அதிபர் டொனால்டு டிரம்பின் தடை நடவடிக்கையால், ‘ஆந்த்ராபிக்’ நிறுவனம் வணிக ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் பெரும் சவால்களை சந்திக்கும்.

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம் (AP Photo/Michael Gonzalez)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 28, 2026 at 2:04 PM IST

1 Min Read
Choose ETV Bharat

வாஷிங்டன்: நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படமாட்டோம் என்று கட்டுப்பாடுடன் இயங்கிய ‘கிளாட் ஏஐ’ (Claude AI) பயன்பாட்டை நிர்வகித்து வரும் ‘ஆந்த்ராபிக்’ (Anthropic) நிறுவனத்திற்கு, அமெரிக்க தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பான பென்டகன், ‘ஆந்த்ராபிக்’ நிறுவனத்தின் ‘கிளாட் ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சில நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, ராணுவத் தேவைகளுக்காக எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல், இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கோரியது.

ஆனால், தங்களின் மென்பொருளை மக்கள் மீதான தவறான கண்காணிப்புக்காகவோ, அல்லது தானாக இயங்கக்கூடிய வகையிலான ஆயுதங்களை நிர்வகிக்கவோ பயன்படுத்தக் கூடாது என ஆந்த்ராபிக் நிறுவனம் உறுதியாக நின்றது.

இதனால், டிரம்ப் ‘கிளாட் ஏஐ’ மென்பொருளை நிர்வகித்து வரும் ஆந்த்ராபிக் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்திற்கு, அந்நாட்டு அரசாங்கமே தடை விதித்திருப்பது, சிலிக்கான் வேலி நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

உடனடியாக இந்த தடை அமலுக்கு கொண்டுவரப்பட்டாலும், பென்டகனுக்கு மட்டும் 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான அமைப்புகள் இந்த தொழில்நுட்பம் சார்ந்து இருப்பதால், ‘கிளாட் ஏஐ’ பயன்பாட்டை நீக்க கூடுதல் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த முடிவை அறிவித்த பின்னர், “தீவிர முற்போக்கு சிந்தனை கொண்ட நிறுவனம்” என ஆந்த்ராபிக்கை டிரம்ப் விமர்சித்துள்ளார். பொதுவாக, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை மட்டுமே இப்படி விமர்சித்து வந்த டிரம்ப், தற்போது உள்நாட்டு நிறுவனம் மீதே இவ்வாறான விமர்சனத்தை வைத்துள்ளது கூகுள், ஓபன் ஏஐ போன்ற பெரும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: 17 ஒப்பந்தங்களுடன் முடிந்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்: என்னென்ன சிறப்புகள்?

இந்த சூழலிலும், டிரம்பின் இந்த உத்தரவுக்கு டெஸ்லா மற்றும் எக்ஸ் ஏஐ (xAI) நிறுவன தலைவர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் நிர்வகிக்கும் எக்ஸ் நிறுவனமும் ‘க்ரோக் ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருளை வணிக ரீதியில் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் இந்த அறிவிப்பால், அறநெறி சார்ந்து செயல்பட்ட நிறுவனத்தின் வணிக வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது. அந்தவகையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அறநெறிகளுக்கு இடையிலான மோதல் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.