வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ சிறைபிடிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
வெனிசுலா நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று இரவு முதல் அமெரிக்கா வான்படைகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டன.

Published : January 3, 2026 at 4:01 PM IST
வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறை பிடித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.
இதனிடையே, வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று இரவு முதல் அமெரிக்கா வான்படைகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டன. கராகஸின் பல பகுதிகளில் இன்று அதிகாலை அமெரிக்க போர் விமானங்கள் தொடர் தாக்குதலை மேற்கொண்டன.
தொடர் குண்டுவீச்சு தாக்குதலால் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. நள்ளிரவில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ட்ரூத் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கா வெனிசுலா மீது பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட விதிகளை பின்பற்றி இந்த தாக்குத்ல மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

