இந்தியா மீது டிரம்ப் போட்ட வரி: எதிராக 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானம்!
கடைசியாக ஆகஸ்ட் 27, 2025 அன்று விதிக்கப்பட்ட 25% வரியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Published : December 13, 2025 at 3:24 PM IST
வாஷிங்டன்: அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்திருக்கும் நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா மீது போட்ட 50 விழுக்காடு வரி மீது உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்திய பொருட்கள் மீது அதிக வரிகளை விதிக்க வழிவகுத்த, அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய அவசரநிலை பிரகடன உத்தரவை ரத்து செய்வதற்காக, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் (நாடாளுமன்றம்) மூன்று உறுப்பினர்கள் ஒரு புதிய தீர்மானத்தை முன்மொழிந்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை டெபோரா ராஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்டு வந்துள்ளனர். இவர்கள் மூவரும் இணைந்து, இந்தியா மீது கடைசியாக ஆகஸ்ட் 27, 2025 அன்று விதிக்கப்பட்ட 25% வரியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வரி சட்டப்பூர்வமானது அல்ல என ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், இது அமெரிக்காவில் வேலை செய்யும் நபர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், இந்திய பொருள்கள் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கப்படும் சூழல் ஏற்படும் என்றும், இந்திய-அமெரிக்க உறவு இதனால் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வர்த்தகம், முதலீடு என வட கரோலினாவின் பொருளாதாரம் இந்தியாவுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ராஸ், “இந்திய நிறுவனங்கள் இந்த மாகாணத்தில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்து, உயிரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
அதே நேரத்தில், வட கரோலினா உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். டிரம்பின் புதிய வரியால் இவை பாதிக்கப்படும்,” என்று அவர் எடுத்துரைத்தார்.
முன்னதாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் வீசி, “கலாச்சார, பொருளாதாரம் போன்றவற்றில் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு முக்கியமான பங்காளியாக இருந்து வருகிறது. எனவே, இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த சட்டவிரோத வரிகள், ஏற்கனவே உயர்ந்து வரும் செலவுகளை மேலும் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சிரமப்படும், வட டெக்சாஸின் சாதாரண மக்கள் மீது விதிக்கப்படும் ஒரு மறைமுக வரியாகவே இதை பார்க்க முடிகிறது,” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆகஸ்ட் 1 அன்று இந்தியா மீது 25% வரியை அமெரிக்கா விதித்தது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அச்சுறுத்திய அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணியாததால், மீண்டும் 25% வரி விதிக்கப்பட்டது.
தற்போது, இதற்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானம் வெற்றிபெறும் நிலையில், அடுத்தபடியாக செனட் சபை, அதிபர் ஒப்புதல் என பல கட்டங்களை தாண்டினால் மட்டுமே, இந்தியா மீது போடப்பட்டுள்ள 25% வரி திருப்பப்பெறபடும்.

