ETV Bharat / international

'ரஷ்யா Vs உக்ரைன் போர்' நான்கு ஆண்டுகள் நிறைவு; புதினுக்கு எதிராக கொந்தளித்த ஜெலன்ஸ்கி

இரண்டு நாடுகளும் இத்தனை நாட்களாக போரில் ஈடுபடுகின்றன என்றால் அதற்கு புதின் என்ற ஒற்றை மனிதரே காரணம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 4:18 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கீவ்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய அதிபர் புதின் தோல்வி அடைந்து விட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-அமெரிக்கா இடையேயான போர் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நள்ளிரவு தொடங்கிய இந்த போர் நான்கு ஆண்டுகளை கடந்து இன்று ஐந்தாவது ஆண்டாக தொடர்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடம், உடமைகள் உள்ளிட்டவற்றை இழந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தாலும், அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பலமுறை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "உக்ரைனை ஆதரிக்கும் முடிவில் இருந்து அமெரிக்கா ஒரு போதும் பின்வாங்காது. அதிபர் ட்ரம்ப் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவை தொடர்ந்து உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறேன். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், ஒருபோதும் ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க முடியாது. ரஷ்யா விரும்பும் அனைத்தையும் எங்களால் செய்ய முடியாது. இரண்டு நாடுகளும் இத்தனை நாட்களாக போரில் ஈடுபடுகின்றன என்றால் அதற்கு புதின் என்ற ஒற்றை மனிதரே காரணம்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோல்வி அடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார். வீடியோவில் பேசிய அவர், "தலைநகர் கிவ்-வை கைப்பற்றும் நோக்கில், ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது போர் தொடுத்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை நாம் இவ்வளவு காலம் தடுத்து நிறுத்தி வருகிறோம். எளிதாக வெல்லலாம் என்ற ரஷ்யாவின் எண்ணத்தை நம்முடைய போராட்டம் சுக்கு நூறாக உடைத்துள்ளது. உக்ரைனின் லட்சக்கணக்கான மக்களின் தைரியமும், நமது வீரர்களின் கடின உழைப்பும் இதை சாதித்து காட்டியுள்ளது.

இந்த போரின் தொடக்கத்தை சிந்தித்து பார்க்கும் போது, நாம் எவ்வாறு நம்முடைய சுதந்திரத்தை பாதுகாத்துள்ளோம் என்பதை அறிய முடியும். புதின் எந்த எண்ணத்தில் உக்ரைன் மீது போர் தொடுத்தாரோ? அந்த எண்ணம் படுதோல்வி அடைந்துள்ளது. அவரால் உக்ரைனியர்களின் மன தைரியத்தையும், உழைப்பையும் உடைக்க முடியவில்லை. நாம் உக்ரைனை பாதுகாத்துள்ளோம். அமைதியையும், நீதியையும் பாதுகாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.