பரபரப்பு வீடியோ: துப்பாக்கி முனையில் பெண்களை மிரட்டிய இலங்கை எம்.பி.
பெண்களை மிரட்டும் இலங்கை எம்.பி.யின் காணொளி தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Published : April 27, 2026 at 10:20 AM IST
ராமேஸ்வரம்: நிலத்தகராறு ஒன்றில் இலங்கையை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள கிராமம் பெரியவிளான். இந்த கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட ஏக்கர் நிலத்தை தனக்கே சொந்தம் என்று யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா உரிமைக் கொண்டாடி வருகிறார். அதேபோல், மற்றொரு தரப்பினரும் இந்த நிலத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளது எனக் கூறி வருகின்றனர்.
இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்த சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது பணியாளர்களைை அழைத்து வந்து அந்த நிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள், நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி எம்.பி. ராமநாதன் அர்ச்சுனனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா, தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை திடீரென எடுத்து பெண்களை நோக்கி காட்டி மிரட்டல் விடுத்தார். பெண்கள் மீது மக்கள் பிரதிநிதி ஒருவரே ஆயுதத்தைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்குத் துப்பாக்கி வழங்குவது பொதுமக்களுக்கு ஆபத்தானது என்று அரசுக்கு ஏற்கனவே பலமுறை தெரியப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், இதுவரை அவரிடம் இருந்து துப்பாக்கி திரும்பப் பெறப்படவில்லை. இத்தகைய போக்கு நீடித்தால் தேவையற்ற உயிரிழப்புகளும், அசம்பாவிதங்களும் ஏற்படும்" எனக் கூறினர்.
கைத்துப்பாக்கியை எடுத்து பெண்களை மிரட்டும் இலங்கை எம்.பி.யின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ராமநாதன் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினரான ராமநாதன் அர்ச்சுனா, இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது முதன்முறை அல்ல. அவ்வப்போது சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

