ETV Bharat / international

ஆஸ்திரேலியா கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு; 9 பேர் பலியான துயரம்

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர்
ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர் (AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 14, 2025 at 6:26 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சிட்னி: ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் மர்ம நபர்கள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரை மிக முக்கிய சுற்றுலாத்தலமாகும். விடுமுறை நாட்களில் இங்கு பெரும்பாலான மக்கள் பொழுதை கழிப்பதுண்டு. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிச.14) வழக்கம் போல மக்கள் போண்டி கடற்கரையில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரில் அமைந்துள்ள கடற்கரையில் அமைதியாக பொழுதை கழித்துக்கொண்டிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நிகழ்விடத்தில் இருந்தவர்கள் கூறுகையில், ''சுமார் 10 நிமிடங்களாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. அது சாதாரண துப்பாக்கியின் சத்தம் அல்ல, ஒரு சக்திவாய்ந்த ஆயுதத்தின் சத்தம் போல இருந்தது. துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு இறந்த நிலையிலும், காயமடைந்த நிலையிலும் கிடந்தவர்களை நாங்கள் பார்த்தோம். கைவிடப்பட்ட சில குழந்தைகள் ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருந்தனர்'' என்றனர்.

இந்த துயர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், '' இது யூதர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல். யூத எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடக்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா மீது டிரம்ப் போட்ட வரி: எதிராக 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானம்!

இதையும் படிங்க: 'பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே இனி அமெரிக்க குடியுரிமை?' - டிரம்பின் 'தங்க அட்டை' திட்டத்துக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள்

இதற்கிடையே சம்பவ இடத்தை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொருட்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.