ETV Bharat / international

நடுக்கடலில் பற்றி எரிந்த பயணிகள் கப்பல்; 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு, 41 பேர் மாயம்

தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கடலில் குதித்த சிலரை அருகில் இருந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்கள் மீட்டனர்.

இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் தீ விபத்து
இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் தீ விபத்து (AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 2, 2026 at 8:44 PM IST

1 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: இந்தோனேசியாவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிர் பிழைக்க கடலில் குதித்த 41 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா நகரில் இருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசர் நகரை நோக்கி பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றது. நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கப்பல் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கப்பலில் தீ வேகமாக பரவியதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சிலர் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்தனர்.

இதையும் படிங்க.. விபத்தில் சிக்கிய சுற்றுலா விமானம்; 13 பேர் உயிரிழப்பு

பயணிகள் கப்பல் தீப்பிடித்து எரிவது குறித்த தகவல் அறிந்ததும், சுரபியாவில் இருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், கப்பலில் தவித்துக் கொண்டிருந்த 225 பயணிகளை பத்திரமாக மீட்டனர். கடலில் குதித்த சிலரை அருகில் இருந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்கள் மீட்டனர்.

மீட்பு பணிகளுக்காக சம்பவ இடத்திற்கு 4 மீட்புக் கப்பல்கள் வந்திருந்தன. ஆனால், விபத்துக்குள்ளான கப்பலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்ததால், அருகில் நின்று கொண்டிருந்த மீட்புக் கப்பல்களால் உடனடியாக நெருங்க முடியவில்லை. இதையடுத்து, சுரபயாவில் இருந்து பெரிய மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பயணிகள் கப்பலின் கேப்டன், விபத்து குறித்து தங்கள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க முயன்றார். ஆனால், அவருடைய நிறுவனத்தில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி முகமது மசூத் கூறுகையில், "பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மீட்புப் பணிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் முடித்து அனைவரையும் பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாததாலும், மோசமான வானிலையாலும் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த மாதம் 70 பேருடன் சென்ற கப்பல் மூழ்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் மாயமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.