இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் இந்துவே அல்ல - மோகன் பகவத் காட்டம்
நான் மத அறிஞரோ அல்லது மதத்தலைவரோ அல்ல; மதங்கள் வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றே எனக்கூறும் சமூகத்தில் செயல்பட்டு வருகிறேன் என நியூயார்க்கில் மோகன் பகவத் பேசினார்.

Published : August 30, 2026 at 1:25 PM IST
|Updated : August 30, 2026 at 1:37 PM IST
நியூயார்க்: இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்று நினைக்கும் இந்து, இந்துவாகவே இருக்க முடியாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் காட்டமாக பேசினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க 'உலகளாவிய ஒருமைப்பாடு கொண்டாட்டம்' (Universal Oneness Celebration) என்ற நிகழ்ச்சியில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க (RSS) தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.
'ஒரே உலகம் ஒரே மனிதநேயம்' மற்றும் 'வசுதெய்வ குடும்பகம்' என்ற தத்துவத்தை மையமாக கொண்டு பேசிய அவர், “இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்று நம்பும் ஒரு இந்து, தனது இந்துத்துவாத அடையாளத்தையே இழக்கிறார். இந்துத்துவம் மனிதனின் கண்ணியத்தை அங்கீகரிப்பதோடு, ஒரே உண்மையை அடைவதற்குப் பல வழிகள் உள்ளன என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது” என்றார்.
அப்போது, 2018ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சொற்பொழிவின்போது, இஸ்லாமியர் ஒருவர் அவரிடம் கேட்ட கேள்வியை நினைவுகூர்ந்த அவர், "அங்கு வந்திருந்த முஸ்லிம் சகோதரர்கள் என்னிடம், ‘நீங்கள் இந்துத்துவ அமைப்பு 'இந்து ராஷ்ட்ரம்' பற்றிப் பேசுகிறீர்கள். அப்படியானால் எங்களை போன்ற முஸ்லிம்களின் நிலை என்ன? எங்களை வெளியேற்றிவிடுவீர்களா?' என்று கேட்டனர்.
அதற்கு நான், 'இல்லை, அது இந்துத்துவம் அல்ல. பாரதத்தில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைத்தால், அவர் இந்துவாக இருக்க முடியாது' என்று பதிலளித்தேன். ஒவ்வொரு மனிதனும் சமம் என்பதை ஏற்றுக்கொள்வது இந்து அடையாளத்திற்கு அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணியம் உண்டு; நம்மிடையே எந்த வேறுபாடும் இல்லை. நாம் அனைவரும் ஒன்று என்பதே நிலையான உண்மை" என்றார்.
தொடர்ந்து, 1996-ல் நடந்த 'சார்க்கி தாத்ரி' வான்வழி மோதல் விபத்திற்கு பிறகு, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஆற்றிய பங்கினையும் நினைவுகூர்ந்தார். ஹரியானாவில் உள்ள தாத்ரி என்ற இடத்தில் இரு விமானங்கள் மோதிக் கொண்டன. அவை அரபு நாடுகளை சேர்ந்தவை. அதுமட்டுமின்றி, அதில் பயணித்தவர்கள் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.
விபத்து நடந்தவுடனே எங்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள் தான் முதலில் அங்கு சென்று மீட்பு மற்றும் உதவிப்பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து, இறந்தவர்களின் உடல்களை மீட்டெடுத்தல், இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் உடல்களை அடையாளம் காண்பதில் உதவுதல் போன்ற பணிகளை செய்தோம். அந்த நேரத்தில் அவர்கள் இஸ்லாமியர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் கொடுப்பது மட்டுமே வழக்கம்; நாங்கள் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. அதனால் தான் விளம்பரம் மற்றும் பிரச்சாரம் போன்ற விஷயங்களில் நாங்கள் பின்தங்கியுள்ளோம். மேலும், இன்றைய அரசியல் என்பது பொதுமக்களின் கண்ணோட்டத்தை சார்ந்தே உள்ளது. அதனால், வலுவான ஒரு கருத்து நிலவும்போது, எந்தவொரு அரசியல்வாதியும் அதற்கு எதிராக செயல்பட நினைக்க மாட்டார்.
நான் ஒரு மத அறிஞரோ அல்லது மதத் தலைவரோ அல்ல; மதங்கள் வேறாக இருந்தாலும் மனிதநேயம் ஒன்றே என்று சொல்லும் ஒரு சமூகத்தில் இருந்து செயல்பட்டு வருகிறேன். மனிதநேயம் ஒன்றே. அந்த உண்மை ஒன்றே என்றாலும், கூறுபவரை பொறுத்து அது பல வழிகளில் விவரிக்கப்படுகிறது. ஏனெனில், மனிதர்களாகிய நாம் நம் மனதிற்குள் உருவாக்கப்பட்டிருக்கும் சிந்தனைகளின் கைதிகளாக இருக்கிறோம்" என்று மோகன் பகவத் பேசினார்.

