ETV Bharat / international

நேபாளத்தில் உறவுகளைத் தேடும் குடும்பத்தினர் - ஒரு செய்தியாளரின் டைரி குறிப்பு

"புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றுக்கு மத்தியில் இமயமலைப் பகுதி மக்கள் இனி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சத்துடனேயே வாழ வேண்டியிருக்கும் போல தெரிகிறது."

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கிற்கு பிறகு பெருக்கெடுத்து ஓடும் ஆறு
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கிற்கு பிறகு பெருக்கெடுத்து ஓடும் ஆறு (ETV Bharat)
author img

By Surendra Phuyal

Published : September 2, 2026 at 10:17 PM IST

4 Min Read
Choose ETV Bharat

நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்ட 4 நாட்களுக்குப் பிறகு தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அங்கே, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த 60 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

அங்கு கல்பனா, கோபிலா ஸ்ரேஸ்தா ஆகிய இரு சகோதரிகளை நான் சந்தித்தேன். அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தனர். அவர்களைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்குமா என்ற கவலையுடன் மருத்துவமனையை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

கல்பனா சகோதரிகளை போன்று, பெருவெள்ளத்தில் உறவுகளை பறிகொடுத்தவர்கள், அவர்களின் புகைப்படங்களை மருத்துவமனை சுவரில் ஒட்டி வைத்துள்ளனர். அந்த சுவரில் கல்பனா சகோதரிகளும் தங்கள் குடும்பத்தினரின் புகைப்படங்களை ஒட்டி வைத்தனர்.

காணாமல் போனவர்கள் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் நகர்வதால், குடும்பத்தினரிடையே ஏமாற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால், அதற்க முற்றிலும் மாறாக, சுவரில் ஒட்டப்பட்டிருந்த குழந்தைகளின் சிரித்த முகமும், பெரியவர்களின் சிரித்த முகமும் என்னையே வெறித்துப் பார்ப்பதுபோல் இருந்தது.

நேபாளம், இதற்கு முன்பு பல பேரிடர்களைக் கண்டுள்ளது. ஆனால் இது மிக மோசமான பேரிடர். கல்பனா தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை மருத்துவமனை சுவரில் ஒட்டும்போது நான் உதவினேன். அப்போது,"காணாமல் போன என் சகோதரிகள், அவர்களின் குடும்பத்தினரின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து சோர்வடைந்துவிட்டேன்" என்று கல்பனா கூறினார். செல்போனில் அவர் காணாமல் போன உறவினர்களின் படங்களை பகிர்ந்தபோது அவருடைய விரல்கள் நடுங்கின.

மேலும், "காத்மாண்டில் இருந்து 60 கி.மீ. வடக்கே உள்ள நுவாகோட்-ராசுவா எல்லையில் உள்ள பெட்ராவதி கிராமத்திற்கு 24 மணி நேரத்திற்குப் பிறகுதான் போலீஸ் வந்தது. காணாமல் போனவர்களைக் கண்டறிய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை" என்று கூறி அவள் ஆதங்கப்பட்டாள்.

அப்போது உடனிருந்த சகோதரி கோபிலா, "காணாமல் போனவர்கள் இனி உயிரோடு கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களால் செய்ய முடிந்தது இதுதான். அவர்களுக்கு என்ன ஆனது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்" என்று கூறினார்.

அந்த சமயத்தில், மருத்துவமனைக்கு வெளியே மேலும் பலர், பெருவெள்ளத்திற்குப் பிறகு காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை மருத்துவமனை சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு பெண்மணி, கண்கலங்கியபடி நின்று கொண்டிருந்தார். அவருடைய சகோதரன் காணாமல் போய்விட்டதாக கூறினார். "நான் என் சகோதரரை தேடிக்கொண்டிருக்கிறேன். டிரைவர் வேலை பார்த்த அவர், நதிக்கரையில் உள்ள நெடுஞ்சாலையில் லாரியில் திபெத் எல்லைக்கு சென்று கொண்டிருந்தபோது, லாரியுடன் காணாமல் போனார்." என்று அவர் கூறினார்.

அங்கு நான் சந்தித்த அனைத்து மனிதர்களின் கதையும், துயரமும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இன்றி, திடீரென்று வந்த வெள்ளத்தில் மக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். விரட்டிக் கொண்டு வருவதுபோல் வந்த வெள்ளம், முழு நிலப்பகுதியை மூழ்கடிப்பதையும், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை அடித்துச் செல்வதையும், மக்கள் தப்பிக்க வழியில்லாமல் போனதையும் வீடியோ காட்சிகள் காண்பித்தன.

சில நாட்களுக்கு முன்புதான், நேபாளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களான ராசுவா மற்றும் நுவாகோட்டில் இருந்து காத்மாண்டில் உள்ள எனது வீட்டிற்கு சென்றிருந்தேன்.

அப்போது காத்மாண்டிற்கு வடக்கே அமைந்துள்ள இமயமலைச் சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளின் அழகைக் கண்டு வியந்தேன். வழக்கம்போல லாங்டாங் தேசியப் பூங்காவிற்கு தனியாக சென்றேன். அந்த பூங்கா, லாங்டாங் லிருங் மலை போன்ற பிரம்மிக்க வைக்கும் சிகரங்களையும், கோசைன்குண்டா, சூரியகுண்டா ஆகிய அமைதியான ஏரிகளையும் கொண்டுள்ளது. அந்த ஏரிகள், நேபாள இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் வழிபடும் சிவன் அல்லது குரு ரிம்போச்சேவின் ஆகிய தெய்வங்களின் இருப்பிடமாக போற்றப்படுகின்றன.

அண்மையில் பெய்த பருவமழையால், நுவாகோட்டில் இருந்து ராசுவா வரை உள்ள பள்ளத்தாக்குகளும் சிகரங்களும் பசுமையாக காட்சி அளித்தன. மக்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டனர். ஆனால், நான்கே நாட்களில், திரைப்படத்தில் வரும் காட்சிபோல ஒட்டுமொத்த காட்சியும் மாறி, பேரழிவை காண நேரிட்டது.

நேபாள பெருவெள்ளத்தில் ராசுவா மாவட்டத்தில், போட்டே கோஷி ஆற்றின் கரையில் இருந்த சியாப்ரு பென்சி நகரம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அங்கு ஹோட்டல் நடத்தி வரும் செவாங் லாமாவை தொலைபேசியில் அழைத்தேன். அவர், "எங்கள் ஹோட்டலும், இந்த முழு நகரமும் அழிந்துவிட்டது. என் மனைவி, மகன், தாய் ஆகியோரையும் காணவில்லை. எதுவும்... எதுவும் மிஞ்சவில்லை" என்று கதறியபடி கூறினார்.

மற்றொரு நண்பரான சுப்பா தமாங், தனது சகோதரி, உறவினர்கள் மற்றும் பல நண்பர்கள் அவர்களின் வீடுகளுடன் சேர்த்து அடித்துச் செல்லப்பட்டதாக வேதனையுடன் கூறினார்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட இந்த திடீர் பெருவெள்ளம், லாங்டாங் சிகரத்தின் வடக்குப் பகுதியில் சுமார் 7,000 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால் தூண்டப்பட்டது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இது ஒரு புதுவகையான காலநிலை பேரழிவை ஏற்படுத்திள்ளது. பனிப்பாறை சரிவு, அதன் விளைவாக பனிப்பாறை உருகியதால் 'லெண்டே கோலா' என்ற சிறிய நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது, போட்டே கோஷி ஆற்றில் கலந்துள்ளது. இந்த ஆறு கீழே செல்லச் செல்ல திரிசூலி, நாராயணி அல்லது கண்டகி என்று அழைக்கப்பட்டு, இறுதியில் கங்கையில் கலக்கிறது. இதனால் போட்டே கோஷியில் சுனாமி போன்ற பிரம்மாண்டமான திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் பெருவெள்ளம், முதலாவதாக, நேபாள-சீன எல்லையில் உள்ள கைரோங் துறைமுகத்தின் நுழைவு வாயிலை அழித்தது. அந்த வழியாக கைலாச யாத்திரை சென்ற வெளிநாட்டுப் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரையும் 30 நிமிடங்களுக்குள் அடித்துச் சென்றது.

கடந்த ஆண்டும், இந்த பகுதியில் இதேபோன்ற ஒரு பேரழிவு ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, லாங்டாங் லிருங்கின் தெற்குப் பகுதியில் இருந்து ஒரு பெரிய பனிப்பாறை சரிந்து விழுந்ததில், ஒரு கிராமமே அழிந்துபோனது. அந்த கிராமத்தில் 400 பேர் வசித்து வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம், ஒரு இமயமலை நதியில் ஏற்பட்ட சுனாமி போன்றது. இது மிகக் குறுகிய காலத்திற்குள் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.

புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றுக்கு மத்தியில் இமயமலைப் பகுதி மக்கள் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற பயத்துடனேயே வாழ வேண்டியிருக்கும் போல தெரிகிறது. இந்த வெள்ளத்திற்குப் பிறகு, இந்த மலைப்பகுதிகள் இனி ஒருபோதும் பழைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை என்பதுதான் உண்மை.