ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினை தூரத்தில் நடக்கும் நிகழ்வு அல்ல; ராஜ்நாத் சிங் 'வார்னிங்'
ஜெர்மனி நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நிலைக்குழுவிடம் உரையாற்றிய ராஜ்நாத் சிங், இன்றைய உலகம் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.


Published : April 22, 2026 at 1:14 PM IST
பெர்லின்: ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பிரச்சனை ஏதோ தொலைவில் நடக்கும் நிகழ்வு அல்ல. அது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தனது தாக்குதல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இன்றுடன் இந்த போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில், அதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் நீட்டித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 3 நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். இதற்காக, பெர்லின் விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 50 நாட்களுக்கு மேலாக நீடித்து, உலகளவில் விளைவுகளை ஏற்படுத்தி வரும் மேற்கு ஆசிய மோதல்களுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங்கின் ஜெர்மனி பயணம் அமைந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் இடையே உரையாற்றினார்.
Raksha Mantri Shri @rajnathsingh, during his address to German Parliamentarians in Berlin, called for enhanced #IndiaGermany defence industrial partnerships, inviting German industry to co-create, co-develop and co-innovate under #AatmanirbharBharat to effectively tackle emerging… pic.twitter.com/dgMjyC78IA
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) April 21, 2026
அப்போது பேசிய அவர், “இன்றைய உலகம் பல்வேறு புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த சூழலை மேலும் சிக்கலானதாகவும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகவும் மாறியுள்ளது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, தங்களை மாற்றிக் கொள்ளும் ஒரு மனப்பான்மை என்பது இன்றைய காலத்திற்கு தேவை” என்று குறிப்பிட்டார். மேலும், இந்தியா மற்றும் ஜெர்மனியின் பாதுகாப்பு தொழில்சார் சூழல் அமைப்புகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்பதையும் வலியுறுத்தினார்.
எரிபொருள் தேவைகளில் மேற்காசிய பிராந்தியத்தையே சார்ந்திருக்கும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு, ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் பிரச்சனைகள் ஏதோ தொலைவில் நடக்கும் நிகழ்வுகள் அல்ல. அவை நமது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எதார்த்தமாக உள்ளது.
இந்த சவால்களையும், அவற்றின் நேரடி தாக்கங்களையும் கருத்தில் கொண்டு, இந்திய ஒரு முன்னெச்சரிக்கை உத்தியை கையாண்டு வருகிறது. இது நவீனக் கால உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கும் அவசியம். இதை முன்னெடுத்து செல்வதில் இந்தியப் பிரதமர் மோடியும், ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸும் முக்கியத்துவம் அளித்துள்ளதாக” தெரிவித்தார்.
| இதையும் படிங்க: இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்கள் சென்னை வருகை |
மேலும் பேசிய அவர், “'ஆத்மநிர்பர் பாரத்' (Aatmanirbhar Bharat) திட்டம் என்பது இந்தியாவை பொறுத்தவரை வெறும் கொள்முதல் திட்டம் மட்டுமல்ல. அது ‘இணைந்து உருவாக்குவதற்கும், இணைந்து மேம்படுத்துவதற்கும், புதுமைகளை இணைந்து படைப்பதற்கும் விடுக்கப்படும் ஓர் அழைப்பு’.
ஜெர்மனியின் முன்னணி தொழில் நிறுவனங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில், ஜெர்மனியின் புகழ் பெற்ற 'மிடில்ஸ்டாண்ட்' (சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள்) கொண்டுள்ள துடிப்பையும், வீரியத்தையும் கண்டு வியக்கிறோம். இதே போல இந்தியாவிலும் ஸ்டார்ட்அப் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உறுதுணை அளிக்கப்படுகிறது. இது இந்தியாவையும், ஜெர்மனியையும் இயல்பாகவே மேம்படுத்தும் ஒரு துறையாகும், இதன்மூலம் நமது பார்ட்னர்ஷிப் இன்னும் ஆழமடையும்” என்றார்.

