ஈரானில் வெடித்த மிகப்பெரிய போராட்டம்: தொலைபேசி, இணைய சேவைகள் துண்டிப்பு
அமெரிக்கா - ஈரான் இடையேயான 12 நாள் போருக்கு பிறகு அங்கு பொருளாதார தடைகள் மிகவும் கடுமையாகி, நாணய மதிப்பு குறைந்ததால் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

Published : January 9, 2026 at 3:20 PM IST
துபாய்: ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஈரானில் கடந்த சில வாரங்களாகவே அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஆளும் அரசாங்கத்தின் மீதான அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த வியாழக்கிழமை இரவு அந்நாட்டின் பட்டத்து இளவரசர் நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் பெரிதான உடனேயே ஈரானில் இணைய சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. ஈரானில் அதிக பணவீக்கம், வேலையின்மை, நாணய மதிப்பு சரிவு மற்றும் ஊழல் போன்றவற்றிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வெடித்துள்ள போராட்டமானது முந்தைய போராட்டங்களை போன்று இல்லாமல், நாடு முழுவதும் கிராமங்கள் மற்றும் நகரங்கள் என அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது.
இதுவரை 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 2,270-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது வெடித்துள்ள போராட்டமானது அந்நாட்டின் சிவின் ஆட்சி மற்றும் உச்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்காளில் தெஹ்ரான் முழுவதும் ‘சர்வாதிகாரிக்கு மரணம்’ மற்றும் ‘இஸ்லாமிய குடியரசுக்கு மரணம்’ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் கூடி, ஷாவை புகழ்ந்து, ‘இது கடைசிப் போர்! பஹ்லவி திரும்பி வருவார்!’ என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
ஈரான் மீது உலக கண்கள் இருப்பதாகவும், அனைவரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் பஹ்லவி (1979 வரை ஈரானை ஆட்சி செய்த பஹ்லவி வம்சத்தைச் சேர்ந்தவர்) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரானில் போராட்டம் ஏன்?
1979 ஆம் ஆண்டு ஷா வம்சத்தாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஈரான் ஒரு இஸ்லாமிய குடியரசு நாடாக மாறியது. அப்போது இஸ்லாமிய புரட்சிகர கவுன்சிலின் உறுப்பினராக இணைந்த காமேனி, 1982-ல் அந்நாட்டின் அதிபரானார். அதனையடுத்து 1989-ல் ஈரானின் உச்ச தலைவராக காமேனி பொறுப்பேற்றது முதல் இன்றுவரை அவர் தான் அந்த பதவியை வகித்து வருகிறார்.
இஸ்லாமிய சட்டத்தின்படி, ஈரானின் அரசுக்கு, நீதித்துறை மற்றும் ஊடகம் என அனைத்து துறைகளிலும் முழு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் எடுக்கும் முடிவுகள் தான் தற்போது அந்நாட்டில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்கின்றனர் அவரது எதிர்ப்பாளர்கள்.

