ஈரான் மீது மீண்டும் கொடூர தாக்குதல் - டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் எக்ஸ் தளத்தில், "அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் காலம் முடிந்து விட்டது, நாங்கள் இதற்குப் பணிய மாட்டோம்" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

By ANI
Published : July 8, 2026 at 8:05 PM IST
அங்காரா: போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்து விட்டதால், ஈரான் மீது இன்னும் கொடூர தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், ஈரானுக்கு எதிராக இன்று இரவும் மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்க ராணுவம் தயாராகி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் இந்த பேச்சால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டால், உலக நாடுகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில், வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறி நேற்று இரவு அமெரிக்க ராணுவம் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் ஈரானிய புரட்சிகர காவல் படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகளை இலக்கு வைத்து மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இது குறித்து துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "நேற்று இரவு நாங்கள் அவர்களை மிக கடுமையாக தாக்கினோம். அநேகமாக இன்று இரவும் அவர்களை மிக தடுமையாக தாக்குவோம்" என்று கூறினார்.
ஈரானுடனான தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கை "முடிந்துவிட்டது" என்று குறிப்பிட்ட டிரம்ப், அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை தொடர அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு அனுமதி உண்டு என்றாலும், ஈரான் தங்களது நேரத்தை வீணடிப்பதாக குற்றம்சாட்டினார்.
பதிலடி கொடுத்த ஈரான்
அமெரிக்காவின் நேற்று இரவு வான்வழித் தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க கடற்படையின் தளம் அமைந்துள்ள பஹ்ரைன் மற்றும் அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ள குவைத் ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதில் குவைத் நாடு 2 ஏவுகணைகள் மற்றும் 13 ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
அதே வேளையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் எக்ஸ் தளத்தில், "அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் காலம் முடிந்து விட்டது, நாங்கள் இதற்குப் பணிய மாட்டோம்" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

