தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்துக் கொண்டதில்லை: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
இஸ்ரேலை போலவே இந்தியாவும் பயங்கரவாதத்துக்கு எதிராக எந்த சமரசமும் செய்து கொள்ளாத நாடாக இருக்கிறது. தீவிரவாதம் எந்த ரூபத்திலும் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

Published : February 26, 2026 at 11:26 AM IST
புதுடெல்லி: எந்த மூலையில் தீவிரவாதம் இருந்தாலும், அது உலகம் முழுவதும் நிலவும் அமைதியை கெடுத்துவிடும்; எனவேதான் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எந்தவித சமரசத்தையும் செய்து கொள்வதில்லை என இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் - காசா இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேற்று பென் குரியான் விமான நிலையத்துக்கு சென்ற அவரை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் நேரில் சென்று வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, அரசு மாளிகைக்கு சென்ற இரு நாட்டு தலைவர்களும் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, நேற்று மாலை இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "இஸ்ரேல் மண்ணில் மீண்டும் நான் காலடி எடுத்து வைத்ததும், எனது உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அதே சமயத்தில், இஸ்ரேலில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைத்து என் மனம் வேதனை அடைந்தது.
அன்றைய தினம் நடந்த கொடூர தாக்குதலில் தனது அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வலியை நாங்கள் (இந்தியர்கள்) உணர்கிறோம். உங்கள் சோகத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். எந்த தருணத்திலும் இஸ்ரேலுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்பதை இங்கு உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
ஒரு நாட்டின் குடிமக்கள் கொல்லப்படுவதை யாராலும் நியாயப்படுத்த முடியாது. இந்தியாவும் மிக நீண்டகாலமாக தீவிரவாத தாக்குதலின் வடுக்களை சுமந்து நிற்கும் ஒரு நாடு என்ற முறையில், உங்கள் வலிகளை எங்களால் புரிந்து கொள்ள முடியும். 26/11 மும்பை தாக்குதலில் இஸ்ரேல் குடிமக்கள் உட்பட பல அப்பாவி உயிர்கள் பறிபோனதை இந்த தருணத்தில் நினைவுகூருகிறேன்.
எனவேதான், இஸ்ரேலை போலவே இந்தியாவும் தீவிரவாதத்துக்கு எதிராக எந்த சமரசமும் செய்து கொள்ளாத நாடாக இருக்கிறது. தீவிரவாதம் எந்த ரூபத்திலும் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. தீவிரவாத விஷயத்தில் எந்த இரட்டை நிலைப்பாட்டையும் இந்தியா எடுப்பதில்லை.
தீவிரவாதம் மனித சமூகத்தையே சீர்குலைக்க முயல்கிறது; வளர்ச்சியை தடுக்கிறது. உலகின் எந்த மூலையில் தீவிரவாதம் இருந்தாலும், அது அனைத்து நாடுகளிலும் உள்ள அமைதியை கெடுத்துவிடும். எனவே தீவிரவாதத்தை எதிர்த்து நாம் போராட வேண்டியது அவசியம். அதற்கு உலக நாடுகளின் நீடித்த மற்றும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இதன் காரணமாகவே, தீவிரவாதத்துக்கு எதிராக எந்த நாடு முன்னெடுப்பை எடுத்தாலும், அதில் இந்தியாவும் தனது பங்களிப்பை வழங்குகிறது.
காசா அமைதி நடவடிக்கைக்கு இந்தியா தனது முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இது இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் என நான் நம்புகிறேன். அமைதியை நோக்கிய பயணம் எளிதானது அல்ல. ஆனால், உங்களின் (இஸ்ரேல்) எல்லா முயற்சிகளிலும் இந்தியா உடன் இருக்கும்.
தீவிரவாதத்துக்கு எதிரான இஸ்ரேலின் துணிச்சலுக்கும், உறுதியான நிலைப்பாட்டுக்கும் இந்தியாவில் தனி மரியாதை உள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர், இஸ்ரேலியர்களை தங்கள் உறவினர்களாவே இந்தியா நினைத்து பழகி வருகிறது.
அதேபோல, குஜராத்தின் நவாநகர் மன்னரான ஜாம் சாகேப், திக்கற்று தவித்த யூத குழந்தைகளுக்கும், போலந்து குழந்தைகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது வரலாறு. எனவே, ஜாம் சாகேப்பின் சிலை இஸ்ரேலில் நிறுவப்படவுள்ளது என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன்" என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

