ETV Bharat / international

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி - யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தல்

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-ஆவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 30, 2026 at 4:30 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் நாட்டில் யோகா கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை புறப்பட்டு சென்றார். பயணத்தின் முதல் கட்டமாக உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்காண்ட் சென்ற அவருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார். அதைத்தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் நடத்திய கலை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அடுத்த சில நாட்களுக்கு உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானில் இருப்பேன். உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இருக்கிறேன்.

மேலும், தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி மற்றும் மகாத்மா காந்தி மையம் ஆகியவற்றை பார்வையிட உள்ளேன். தொடர்ந்து கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பலதரப்பு மற்றும் இருதரப்பு சந்திப்புக்களை மேற்கொள்ள இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து இன்று தாஷ்கண்டில் உள்ள யோகா கூட்டமைப்புகள் இணைந்து நடத்திய யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் அங்கிருந்த யோகா ஆர்வலர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

தொடர்ந்து யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் அவர் எடுத்து கொண்ட ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி, "நமஸ்தே, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று யோகா செய்து காட்டியுள்ளீர்கள். அனைத்து வயதினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். உஸ்பெகிஸ்தான் யோகாவுடன் இணைந்ததற்கு என் நண்பரான உஸ்பெகிஸ்தான் அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி" என பிரதமர் மோடி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று பிற்பகலில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவ்வுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.

தொடர்ந்து ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-ஆவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.