ETV Bharat / international

பிரமாண்ட 'பிராம்பனன்' சிவன் கோயில் - இந்தோனேசிய அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்று மோடி தரிசனம்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசிய பயணம் நிறைவடைந்தது.

இந்தோனேசிய அதிபருடன் ஒரே ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் மோடி
இந்தோனேசிய அதிபருடன் ஒரே ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் மோடி (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 3:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஜகார்த்தா: இந்தோனேசியாவுக்கு அரசு முறைப் பயணமாக சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜூலை 8, 2026) அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் ஒரே ஹெலிகாப்டரில் பயணித்து பிரம்மாண்டமான 'பிராம்பனன்' சிவன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.

கி.பி. 9 அல்லது 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த பிராம்பனன் கோயில் வளாகம், இந்தோனேசியாவின் மிகப் பெரிய இந்து ஆன்மீக தலமாக விளங்குகிறது. இது சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயத்திற்கு அடுத்தபடியாக தென்கிழக்கு ஆசியாவின் 2-வது பெரிய இந்து கோயிலான இது, யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள ராமாயணக் காவியத்தின் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஹெலிகாப்டர் மூலம் பிராம்பனன் கோயிலுக்கு இன்று அழைத்து சென்றார்.

அப்போது வான் வழியாகக் கண்ட கோயிலின் அழகிய காட்சியை தனது எக்ஸ்தள பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, "கம்பீரமான பிராம்பனன் ஆலயம்!" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

கோயில் வளாகத்தில் வேத மந்திரங்கள் முழக்க இரு தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு தலைவர்களும் கோயிலை வலம் வந்து, சிவபெருமான் சன்னதியில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

இந்த ஆலயத்தை பாதுகாக்கவும் புனரமைக்கவும் இந்தியா உதவ முன்வந்துள்ளது. இதற்காக, இந்தியத் தொல்லியல் துறை மற்றும் இந்தோனேசிய பாரம்பரிய நிறுவனம் இணைந்து செயல்பட இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.

பிரதமர் மோடியும், அதிபர் சுபியாந்தோவும் இணைந்து இந்த புனரமைப்புத் திட்டத்திற்கான பணிகளையும் இன்று தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய பேசிய பிரதமர் மோடி, "இந்த புனிதமான ஆலயத்தை இவ்வளவு காலம் அர்ப்பணிப்புடன் பாதுகாத்து வந்த இந்தோனேசிய மக்களுக்கு எனது நன்றி. இதன் முழுமையான புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், வரும் 2029-ஆம் ஆண்டு இதன் திறப்பு விழாவிற்கு வருமாறு அதிபர் பிரபோவோ எனக்கு அழைப்பு விடுத்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்தோனேசியாவுடன் பல நூற்றாண்டுகளாக தொடரும் நாகரிக பிணைப்பை கொண்டாடும் வகையில், வரும் 2026-2027 ஆம் ஆண்டை தாகூர்-தேவந்தரா கலாச்சார மற்றும் கல்வி ஆண்டாக இரு நாடுகளும் இணைந்து கொண்டாடும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1927-ல் ரவீந்திரநாத் தாகூர் இந்தோனேசியாவிற்கு மேற்கொண்ட வரலாற்றுப் பயணத்தின் நூற்றாண்டு நினைவாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசிய பயணம் நிறைவடைந்துள்ளது.