ETV Bharat / international

ஆஸ்திரேலியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி - மெல்போர்னில் உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலிய பயணத்தையும் முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி நிறைவாக நியூசிலாந்து நாட்டிற்குச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்ல்போன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி
மெல்போர்ன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 10:28 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மெல்போர்ன்: இந்தோனேசியா சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது 3 நாடுகள் பயணத்தின் அடுத்த கட்டமாக இன்று (ஜூலை 8, 2026) ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டு அரசு மற்றும் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அவரை நேரில் சந்தித்து இருதரப்பு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின் போது முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், 'குவாட்' (QUAD) கூட்டமைப்பின் கீழ் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை, முழுமையான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமாக மாற்றுவது குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

நரேந்திர மோடியின் இந்த பயணத்தின் போது தூய்மையான எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், முக்கிய தாதுக்கள் விநியோகம் மற்றும் அதி நவீன தொழில்நுட்பத் துறைகளில் புதிய கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

மேலும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பது குறித்தும் இக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா சென்றடைந்தது குறித்து நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை வந்தடைந்தேன். இந்தப் பயணம் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நட்புறவுக்கு மேலும் வலுசேர்க்கும். பிரதமர் அல்பானீஸுடனான பேச்சுவார்த்தைகளை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'பிராம்பனன்' சிவன் கோயில் - இந்தோனேசிய அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்று மோடி தரிசனம்

இந்தோனேசியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியப் பயணத்தையும் முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி தனது பயணத்தின் நிறைவாக நியூசிலாந்து நாட்டிற்குச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.