'இந்தியாவின் ஆதரவை ஒரு போதும் மறக்க மாட்டோம்' - ஈரான் நெகிழ்ச்சி
தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், ஜூலை முதல் வாரத்தில் இந்த இறுதி சடங்குகள் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகின்றன.

By ANI
Published : July 6, 2026 at 10:52 AM IST
புதுடெல்லி: இக்கட்டான சூழலில் இந்தியா அளித்த ஆதரவை ஈரான் மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் என்று புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கில் இந்தியா பங்கேற்றதை தொடர்ந்து, இந்திய அரசுக்கும், மக்களுக்கும் ஈரான் அரசு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த இக்கட்டான துக்க காலத்தில் இந்தியா அளித்த ஆதரவு, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பல நூற்றாண்டுகள் நீடித்து வரும் நாகரிக மற்றும் கலாச்சார நட்புறவை மீண்டும் நிரூபித்து விட்டது" என குறிப்பிட்டுள்ளது.
டெஹ்ரானில் நடைபெற்று வரும் காமேனியின் இறுதி சடங்கு நிகழ்வுகளில், இந்திய அரசின் சார்பில் பீகார் மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அத்தா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இவர்கள் மட்டுமல்லாமல், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவருமான சல்மான் குர்ஷித் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி ஆகியோரும் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் கலந்து கொண்டு மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை பிரதிபலிக்கும் வகையில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், சீக்கிய பிரதிநிதிகள் மற்றும் இந்து ஆன்மீகப் பெரியவர்கள் அடங்கிய இந்தியாவின் அனைத்து மத குழுவும் டெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா மைதானத்தில் காமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் வான் வழித் தாக்குதலில் ஆயத்துல்லா அலி காமேனி வீர மரணம் அடைந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட தீவிர போர் காரணமாக அவரது இறுதிச் சடங்குகள் நான்கு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், ஜூலை முதல் வாரத்தில் ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனியின் இறுதி சடங்குகள் மிக பிரம்மாண்ட முறையில் அந்த நாட்டு அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச நாடுகளின் அரசியல் அழுத்தங்களையும் மீறி இந்தியா இந்த நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

