காசா போருக்கு பிறகு முதல் தேர்தல்: ஆர்வமுடன் வாக்களிக்க காத்திருக்கும் பாலஸ்தீனியர்கள்
இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கிற மேற்கு கரையில் சுமார் 15 லட்சம் மக்களும், டெய்ர் எல்-பாலா பகுதியில் 70 ஆயிரம் மக்களும் வாக்களிக்கவுள்ளனர்.


Published : April 25, 2026 at 2:30 PM IST
ரமல்லா: காசா போருக்கு பிறகு முதன்முறையாக காசாவில் நகராட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்குக் கரை மற்றும் காசாவின் மத்திய பகுதியைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இஸ்ரேலுக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் காசாவின் மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துவிட்டது. தொடர் போர் காரணமாக, காசாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில், காசாவின் டெய்ர் எல்-பாலா பகுதியில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கிற மேற்கு கரையில் சுமார் 15 லட்சம் மக்களும், டெய்ர் எல்-பாலா பகுதியில் 70 ஆயிரம் மக்களும் வசித்து வருவதால், இந்த பகுதியில் தேர்வு நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது.
இந்த தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் மதச்சார்பற்ற - தேசிய ஃபதா கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பலர் போட்டியிடுகின்றனர். அவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களையும் இணைத்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஃபதா கட்சி. அதே சமயம், காசாவின் பாதிப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற ஹமாஸ் இதுவரை தனது வேட்பாள்ர்கள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
2006ஆம் ஆண்டு காசாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2007 முதல் ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் காசாவில் தற்போது முதன்முறையாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜனாதிபதி அப்பாஸுக்கு தற்போது 90 வயதாகும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பதவியை தக்கவைத்துள்ளார். அடிக்கடி தேர்தல்கள் நடத்தவிருப்பதாக கூறிவந்தபோதிலும் இதுவரை நடத்தப்படவில்லை. இந்நிலையில், தனது வெற்றி தோல்வியை சோதித்து பார்க்கும் ஒரு பரிசோதனையாக இந்த தேர்தலை அணுகவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் அப்பாஸ்.
இந்த தேர்தல் குறித்து மேற்கு கரை நகரமான துல்கரேமைச் சேர்ந்த தொழிலதிபரான மஹ்மூத் பாதர் கூறுகையில், “இந்த தேர்தலால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. வேட்பாளர்கள் கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது சுயேச்சையாகவோ நின்றாலும் அதனால் எங்களுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.
எப்படியும் துல்கரேமை இஸ்ரேல்தான் ஆக்கிரமித்து செய்திருக்கிறது. இங்கு தேர்தல் நடத்துவதெல்லாம் எங்களுக்கு சுந்திரம் இருப்பது போன்ற பிம்பத்தை உலகுக்கு காட்டத்தான்” என்கிறார்.
| இதையும் படிங்க: புதிய கட்சி தொடங்கினார் கே. சந்திரசேகர ராவ் மகள் கவிதா; அனல் பறக்கும் தெலங்கானா அரசியல் களம் |
காசா நகராட்சி தேர்தல்
ரமல்லா உள்ளிட்ட நகரங்களில் போட்டியின்றி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அதேசமயம் மேற்கு கரையில் இருக்கிற வாக்குச்சாவடிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
ஆனால் டெய்ர் அல்-பாலா பகுதியில் போர் தாக்கத்தால் மின்சார பற்றாக்குறை பிரச்சினை இருக்கிறது. எனவே அங்கு மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதற்காக, வாக்குப்பதிவு மையங்களில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனமும் பணியில் இருக்கிறது என தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஃபரீத் தாமல்லா தெரிவித்திருக்கிறார்.
உலகின் மற்ற நாடுகளைப் போன்று இந்த தேர்தல் நடைபெறாது என்றாலும், முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.
மிகவும் சவாலான இந்த காலகட்டத்தில் பாலஸ்தீனியர்களின் ஜனநாயக உரிமையை வெளிக்காட்ட தேர்தல் நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என அறிக்கை வெளியிட்டிருக்கிற ஐ.நா அமைப்பு.

