நேபாள வெள்ளப்பெருக்கு - 750 -ஐ தாண்டிய உயிரிழப்புகள்; 5-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்
நேபாள வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் நேபாள அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், அவசர உதவிகளுக்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுளள்ன.

Published : August 30, 2026 at 2:16 PM IST
காத்மாண்டு: நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 750 பேர் உயிரிழந்துள்ளதகவும், 3000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளன.
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்புப் பணிகள் 5வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேபாள பேரிடர் மேலாண்மை அமைப்பு இப்பணியை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகிறது. நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் 259 உடல்களும், நவல்ப்பராசி கிழக்கு மாவட்டத்தில் 184 உடல்களும், நவல்ப்பராசி மேற்கு மாவட்டத்தில் 82 உடல்களும், கோர்கா மாவட்டத்தில் 58 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) தெரிவித்துள்ளது. அதேபோல, நுவாகோட்டில் 52 உடல்களும், தாடிங்கில் 50 உடல்களும், தனஹுவில் 36 உடல்களும், ரசுவாவில் 13 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
நேபாளம் ராசுவா பகுதியில் உள்ள போட்டே கோஷி ஆற்றில் வெள்ளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், புதிய வெள்ள அபாய எச்சரிக்கையை NDRRMA விடுத்துள்ளது.
இதன் காரணமாக ராசுவா, நுவாகோட், தாடிங் மற்றும் சித்வான் மாவட்டங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள்,ஆற்றங்கரையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றுடன் மீட்பு பணிகள் 5வது நாளை எட்டியுள்ள நிலையில், நேபாள - சீன எல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் தங்களுடைய சொந்தங்கள் குறித்த தகவலுக்காக கவலையுடன் காத்திருக்கின்றனர்.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 3,700-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் நேபாள அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், அவசர உதவிகளுக்கான எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750- ஐ தாண்டி உள்ளதாகவும், 3000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் நிலைமை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் நேபாள அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
| இதையும் படிங்க: அந்த பச்சை வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? - நேபாள பெருவெள்ளத்தில் இந்த குடும்பம் தப்பியதா? |
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நுவாகோட்டில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆடைகள், நூடுல்ஸ், பிஸ்கட் மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டிகள் மற்றும் பைகளுடன் ஹெலிகாப்டர்கள் வந்து சேர்ந்துள்ளன.
நேபாள உள்துறை அமைச்சர் சுதன் குருங், இன்று நுவாகோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். அப்பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர் மீட்புக் குழுவினருக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதனிடையே, ரசுவாவில் உள்ள போட்டே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRRMA) அறிவுறுத்தியுள்ளது.

