அரசு நிதி முடக்கம் எதிரொலி; அமெரிக்காவில் 2-வது நாளாக 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
அமெரிக்காவில் அரசின் நிதி முடக்கத்தால் இரண்டாவது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Published : November 9, 2025 at 12:17 PM IST
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் நிதி முடக்கத்தின் காரணமாக, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின் பேரில் இரண்டாவது நாளாக இன்றும் (நவ.9) ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால், பல்வேறு அரசு துறைகள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிதி முடக்கத்தால் அரசுக்கு சொந்தமான விமான நிறுவன பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாய விடுப்பின் பேரில் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக அமெரிக்காவின் நேற்றைய தினம் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, நியூயார்க், அட்லாண்டா, டென்வர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான நிறுவனங்கள் தங்களது இயக்கத்தை குறைத்ததால், இன்று (நவ.9) இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதன்படி, வடகரோலினாவின் சார்லோட் விமான நிலையத்தில் இன்று 130 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அட்லாண்டா, சிகாகோ, டென்வர், நியூ ஜெர்சி, நியூயார்க் ஆகிய விமான நிலையங்களிலும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
| இதையும் படிங்க: நிதி முடக்கத்தால் திணறும் அமெரிக்க அரசு! 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி! |
இந்த பணிநிறுத்தம் தொடர்ந்தால், விமானப் போக்குவரத்து வருகிற நவம்பர் 11 ஆம் தேதிக்குள் 6 சதவீதமும், 14 ஆம் தேதிக்குள் 10 சதவீதமும் பாதிப்படையும் என்று விமானப் போக்குவரத்துத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஊதியமின்றி பெரும்பாலான விமானக் கட்டுப்பாட்டாளர்கள் கட்டாய கூடுதல் நேர வேலை செய்கின்றனர். இதனால், பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணிநிறுத்தம் தொடர்வதால் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர்கள் சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், பணிநிறுத்தம் தொடர்ந்தால் சுற்றுலா முதல் உற்பத்தி வரை பொருளாதாரத்தில் அதிக இழப்புகள் ஏற்படும் என்று எலிவேட் ஏவியேஷன் குழுமத்தின் (Elevate Aviation Group) தலைமை நிர்வாக அதிகாரி கிரெக் ரைஃப் தெரிவித்துள்ளார். அதேபோல், விமானங்களின் ரத்து எதிரொலியால், சரக்கு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் விமானங்கள் மூலம் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படும் பல்வேறு பொருள்களின் வருகை தடைப்பட்டு, அவற்றின் விலை உயர்வதற்கான அபாயம் உள்ளதாகவும் இந்த சங்கம் தெரிவித்துள்ளது.

