ETV Bharat / international

பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: 20-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழப்பு

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 1:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கராச்சி: பாகிஸ்தான் கராச்சி நகரில் நேற்று (மார்ச் 01) ஈரான் அரசை ஆதரித்து அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்திய போது, பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 20-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். மேலும் 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா - ஈரான் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறி வைத்து வான்வெளி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் தெஹ்ரானில் பெருமளவு சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரானும், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக துபாய், கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் பரப்பை மூடியுள்ளன.

மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, காமேனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஈரானுடன் துணை நிற்பதாக தெரிவித்தார். இந்நிலையில் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரக பகுதிகளில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் போராட்டம் நடைபெற்ற நிலையில், இளைஞர்கள் பலர் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்று காவல் துறை அதிகாரிகள் மீது கற்களை வீசத் தொடங்கினர்.

இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் ஈரான் உச்ச தலைவர் மறைவிற்கு பாகிஸ்தான் மக்கள் அமைதியான முறையில் துக்கம் அனுசரிக்க வேண்டும் என அந்நாட்டு அமைச்சர் நக்வி கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து பாகிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் ஷபீர் மிர் கூறுகையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு அதிகாரிகள் முயன்று வருகின்றனர். கராச்சியில் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். மேலும் காவல் நிலையத்திற்கு தீ வைக்க முயன்றனர்.

இதையும் படிங்க: அயதுல்லா காமேனி இறப்பு - ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்?

பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் வன்முறை

காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். இதனால் போலீசார் போராட்டக்காரர்கள் மீது புகைகுண்டுகள் வீசினர். மேலும் பெஷாவர் நகரில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தி அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் புகை குண்டுகள் வீசி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனிடையே மூல்தான் நகரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்து அமைதியான முறையில் பேரணி நடைபெற்றன.