காங்கோவை அச்சுறுத்தும் 'எபோலா' - மருத்துவமனை என்றாலே 'அலறும்' கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள் எபோலா வைரஸால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை விட, பயம் காரணமாக தகுந்த சிகிச்சைகளை பெறாமல் உயிரிழக்கும் அபாயமே தற்போது அங்கு அதிகமாக உள்ளதாக சர்வதேச அமைப்புகள் கூறியுள்ளன.

Published : August 3, 2026 at 5:50 PM IST
புனியா (காங்கோ): ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று காரணமாக, அங்குள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல அஞ்சி வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், பிரசவ கால சிக்கல்களால் உயிரிழக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அங்கு வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாக சர்வதேச சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
காங்கோவில் தற்போது பரவி வரும் எபோலா தொற்று காரணமாக இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிக வேகமாக பரவும் எபோலா பாதிப்பாக இது பார்க்கப்படுகிறது.
தற்போது பரவி வரும் எபோலாவின் 'புண்டிபுகியோ' வகைக்கு என்று இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை என்பது நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
காங்கோவின் இட்டூரி மாகாணம் இந்த எபோலா பரவலின் மையப்புள்ளியாக திகழ்கிறது. அங்குள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
சாதாரண காய்ச்சல் அல்லது உடல்நலக் குறைவுக்காக மருத்துவமனைக்குச் சென்றாலும், எபோலா சந்தேகம் என்று கூறி தங்களை கட்டாயமாகத் தனிமைப்படுத்தி விடுவார்களோ என்று பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும், மருத்துவமனைகளுக்கு சென்றால் அங்கு சிகிச்சை பெறும் பிற நோயாளிகளிடமிருந்து தங்களுக்கும் எபோலா தொற்று பரவிவிடுமோ என்ற பயம் அவர்கள் மத்தியில் நிலவுகிறது.
எபோலா நோய் என்ற ஒன்று இல்லவே இல்லை என்ற வதந்திகளும், கடுமையான கட்டுப்பாடுகளால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் எபோலா சிகிச்சை மையங்களைத் தாக்குவதும் பெண்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எபோலா பரவலுக்கு முன்பு இட்டூரி மாகாணத்தில் வாரத்திற்கு சராசரியாக 3.1 ஆக இருந்த பிரசவ கால தாய்மார்களின் இறப்பு விகிதம், தற்போது இரட்டிப்பாகி 5.8 முதல் 6.2 ஆக உயர்ந்துள்ளது.
புனியா நகரில் உள்ள பெனடிக்ட் கிளினிக்கின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சோனி முவெம்போ கூறுகையில், "வழக்கமாக ஒரு மாதத்திற்கு 60 கர்ப்பிணிகள் வரை மகப்பேறு சிகிச்சைக்காக வருவார்கள். ஆனால், எபோலா பரவலுக்குப் பின் இந்த எண்ணிக்கை வெறும் 10 ஆக குறைந்துவிட்டது" என வேதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உள்நாட்டு மோதல்களாலும், போதிய மருத்துவக் கட்டமைப்புகள் இல்லாமலும் தவித்து வரும் காங்கோவில், தற்போதுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அனைத்தும் எபோலா தடுப்புப் பணிகளுக்கு மட்டுமே திருப்பி விடப்படுகின்றன. இதனால் சாதாரண சிகிச்சைகள் கூட பொதுமக்களுக்கு கிடைக்காத அவலம் ஏற்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் எபோலா வைரஸால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை விட, பயத்தின் காரணமாகத் தகுந்த மருத்துவச் சிகிச்சைகளைப் பெறாமல் உயிரிழக்கும் அபாயமே தற்போது அங்கு அதிகமாக உள்ளதாக சர்வதேச அமைப்புகள் கூறியுள்ளன.

