ETV Bharat / international

பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு - நேபாளத்தில் உறவுகளை இழந்தோரின் வேதனைத் தருணங்கள்

அடையாளம் காணப்படாத உடல்கள், டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு குறிப்பிட்ட எண் கொடுக்கப்பட்டு ஒரே இடத்தில் பெரிய குழியை வெட்டி (Mass Burial)அதில் மொத்தமாக புதைக்கப்படுகின்றன.

நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் குடும்பத்தினர்
நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் குடும்பத்தினர் (AFP Video Screengrab)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 5:46 PM IST

|

Updated : September 2, 2026 at 8:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை ஒரு வாரமாகியும் கண்டுபிடிக்க முடியாததால், அவர்கள் இறந்துவிட்டதாகவே கருதி அவர்களின் குடும்பத்தினர் உடல்களே இல்லாமலும், உருவபொம்மைகளை வைத்தும் இறுதிச்சடங்கு செய்யும் காட்சிகள் காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளமானது, அந்நாட்டை மட்டுமல்லாமல் உலகையே அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

கடல் சுனாமியையே மிஞ்சும் அளவுக்கான பெரு வெள்ளம், நேபாளத்தை தாக்கியது. இமயமலை சிகரங்களில் இருந்து மிகப்பெரிய பனிப்பாறை திபெத்தில் உள்ள நதியில் விழுந்ததால், நேபாளத்தில் இந்த பயங்கர வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேபாளத்தை தாக்கிய பேரிடர்

நேபாளத்தின் போடே கோஷி, திரிசூலி, லெண்டே கோலா ஆகிய நதிகளில் ஏற்பட்ட இந்த வெள்ளம், 5 மாவட்டங்களை உருக்குலையச் செய்துள்ளது.

இந்த வெள்ளத்தில் சிக்கி 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 4,500-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் நேபாள ராணுவம், காவல்துறை, பேரிடர் மீட்புப் படையினர் கடந்த ஒரு வாரகாலமாக தேடி வருகின்றனர். ஆனால், அவர்கள் பெரும்பாலும் சடலங்களாகவே மீட்கப்படுகிறார்கள். மிக சொற்பமான நபர்களே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாள நாட்டின் சித்வான் பகுதியில் நடைபெற்ற இறுதிச்சடங்கில்,  வெள்ளத்தில் இறந்த தமது மகன் ஆயுஷ் கத்காவின் உடலை பார்த்து கதறி அழும் அவரது தாய் முனா கத்கா (நாள்: ஆகஸ்ட் 31)
நேபாள நாட்டின் சித்வான் பகுதியில் நடைபெற்ற இறுதிச்சடங்கில், வெள்ளத்தில் இறந்த தமது மகன் ஆயுஷ் கத்காவின் உடலை பார்த்து கதறி அழும் அவரது தாய் முனா கத்கா (நாள்: ஆகஸ்ட் 31) (AP)

உடல்களே இல்லாமல் இறுதிச்சடங்கு

இதே நிலை தொடர்வதால், தங்களின் அன்புக்குரிய உறவுகள் எப்படியும் கிடைத்து விடுவார்கள் என எண்ணி இருந்த மக்கள், தற்போது நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இதனால் நூற்றுக்கணக்கான நேபாள குடும்பத்தினர், மாயமான தங்கள் உறவுகளை இறந்துவிட்டதாகவே கருதி, கனத்த இதயத்துடன் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்து வருவதை பார்க்க முடிகிறது.

தந்தையோ, தாயோ, மகனோ, மகளோ.. இப்படி எந்த உறவாக இருந்தாலும், அவர்கள் இறந்துவிட்டார்களா, இல்லையா என்பது தெரியாமலேயே அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் வலி மிகக் கொடுமையான ஒன்று.

'ஆன்மாவை அமைதிப்படுத்துகிறோம்'

இவ்வாறு தனது கணவருக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு வந்த டோல்மா நேவார் தமாங் என்ற பெண் ஏ.எஃப்.பி. செய்தியாளரிடம் கூறுகையில், "எனது கணவரின் ஆன்மா அமைதியாக இளைப்பாற வேண்டும் என்பதற்காகவே இந்த இறுதிச்சடங்கை செய்துள்ளோம்.

எனது கணவர் சீனாவுக்கு சென்று கொண்டிருந்த போதுதான் இந்த பேரிடர் ஏற்பட்டது. இதுதொடர்பான செய்தியை பார்த்த பிறகு உடனே அவரது செல்போனுக்கு தொடர்ச்சியாக அழைத்தேன். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை" என கண்ணீருடன் கூறினார்.

இதையும் படிங்க: 900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய பள்ளி தலைமை ஆசிரியர் - நேபாள துயரத்தில் ஆறுதல்

டிஎன்ஏ எண்ணுடன் புதைக்கப்படும் உடல்கள்

இது ஒருபுறம் இருக்க, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் உடல்களை வைக்க இடமில்லாமல் பிணவறைகள் நிரம்பி வழியும் அவலத்தையும் நேபாளத்தில் பார்க்க முடிகிறது.

இதனால் அடையாளம் காணப்பட்ட உடல்கள், உரியவர்களிடம் வேகமாக ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அடையாளம் காணப்படாத உடல்கள், டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு குறிப்பிட்ட எண் கொடுக்கப்பட்டு ஒரே இடத்தில் பெரிய குழியை வெட்டி (Mass Burial)அதில் மொத்தமாக புதைக்கப்படுகின்றன.

அடையாளம் காணப்படாத உடல்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறியீட்டு எண்கள்
அடையாளம் காணப்படாத உடல்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறியீட்டு எண்கள் (AP)

பொம்மைக்கு எரியூட்டும் பரிதாபம்

இதேபோல, தங்கள் அன்பிற்குரிய உறவுகள் பற்றிய தகவல் கிடைக்காத பலர், அவர்கள் உயிருடன் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையை இழந்து, உருவபொம்மைகளை தங்கள் நேசத்துக்குரியவர்களின் உடல்களாக பாவித்து அவற்றை ஊர்வலமாக கொண்டு சென்று எரியூட்டி வருகின்றனர்.

மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த தங்கள் உறவுகளின் உடல்களை பெற்றவர்களும் இறுதிச்சடங்கின் போது கதறி அழுவது நமது ஈரக்குலையை நடுங்கச் செய்கிறது.

தேடும் பணி தீவிரம்

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்கள் நீர் மின்நிலைய சுரங்கப் பாதைகளில் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் அங்கு தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், அனைத்து சுரங்கப் பாதை வாயில்களிலும் டன் கணக்கில் சகதிகள் அடைத்து இருப்பதால், உள்ளே இருந்தாலும் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

இருந்தபோதிலும், ஏதேனும் அதிசயம் நிகழ்ந்துவிடாதா என்ற எண்ணத்தில் சுரங்கப் பாதைகளில் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிசிர் கானல் தெரிவித்தார்.

Last Updated : September 2, 2026 at 8:20 PM IST