ETV Bharat / international

தீவிரம் அடைந்த போர்: இலங்கை கடற்பகுதியில் ஈரான் கப்பல் மீது தாக்குதல்

தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 9:43 AM IST

|

Updated : March 4, 2026 at 12:59 PM IST

Choose ETV Bharat

ஈரான் மீதான போர் தொடங்கி 4 நாட்கள் நிறைவடைந்த நிலையில், யுத்தம் இன்னும் பல வாரங்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் எதிர்காலத் தலைவர்களாக உருவாக இருந்த சிலர் உட்பட, சுமார் 800 பேர் உயிரிழந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ஈரானின் ஏவுதளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்திருந்த நிலையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது.

நேற்று ஈரான் மற்றும் லெபனான் ஆகிய இரண்டு நாடுகளிலும் தாக்குதல் நடத்தியபிறகு, ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும் இஸ்ரேல் மீதும் டஜன்கணக்கில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. அதில் இஸ்ரேலைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் கடற்படையை அழிப்பதையும், அணு ஆயுதம் கிடைப்பதை தடுப்பதையும் உறுதி செய்யும்வரை இந்த போர் தொடரும் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இதனால் உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன.

LIVE FEED

6:30 PM, 4 Mar 2026 (IST)

காமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் உச்ச தலைவர் காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

6:08 PM, 4 Mar 2026 (IST)

இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது தாக்குதல்

ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பில் இன்று தாக்குதலுக்கு உள்ளானது. அதில் இருந்த 101 பேரை காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடாவில் தொடங்கிய இந்த போர் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதி வரை பரவியது தெற்காசியப் பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையின் தெற்கு பகுதியில் காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல்மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து உடனடியாக இலங்கை கடற்படையின் உதவி கோரப்பட்டது. விரைந்து சென்ற இலங்கை கடற்படை உடனடியாக மீட்ப்புப் பணியில் ஈடுபட்டது. ஈரான் கப்பலில் இருந்த வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், பல்வேறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அது ஈரான் கப்பலில் இருந்த வீரர்களா என்பது குறித்து விசாரணை நடத்து வருவதாகவும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அல் ஜசீரா ஊடகத்தின் தகவலின் படி, இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்க முடியாது என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும், தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து 32 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

அந்தப் பகுதியில் வேறு எந்த கப்பல்களையும் கவனிக்கவில்லை என்றும் தெரிவித்த அவர், தற்போது உயிர்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

1:34 PM, 4 Mar 2026 (IST)

இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள்

வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மீட்க, இந்தியா விமான நிறுவனங்கள் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன. நேற்று (மார்ச் 3) மாலை இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இண்டிகோவின் 30 விமானங்கள், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 23 விமானங்கள் உட்பட 58 விமானங்கள் இன்று புறப்படுகின்றன. மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்தில்கொண்டு, இந்திய விமான நிறுவனங்களின் 1,221 விமானங்களும், 388 வெளிநாட்டு விமானங்களும் இன்று வரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. எனவே விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்பு, பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்புகொண்டு விவரங்களை கேட்டறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12:57 PM, 4 Mar 2026 (IST)

இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வாழும் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையானது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்றும், உதவிகளுக்கு 1800118797 (கட்டணமில்லா), +91 11 2301 2113, +91 11 2301 4104, மற்றும் +91 11 2301 7905 ஆகிய எணிகளில் தொடர்புகொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள இந்திய தூதரகங்களுக்கான அவசர தொடர்பு எண்களையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதன்படி,

பஹ்ரைன் : +973 39418071

ஈரான் : +98 9128109115 / +98 912810910 / +98 932179359

ஈராக் : +964 771 651 1185 / +964 770444 4899

இஸ்ரேல் : +972 54 7520711 / +972 54 2428378

ஜோர்டான் : +962 770 422 276

குவைத் : +965 65501946

லெபனான் : +961 76860128

ஓமன் : +968 98282270 (WhatsApp) / 80071234

கத்தார்: +974 55647502

ரமல்லா மற்றும் பாலஸ்தீனம் : +970 592916418

சவுதி அரேபியா (ரியாத்): +966 11 4884697 / 800 247 1234

சவுதி அரேபியா (ஜெட்டா): +966 126648660 / +966 12 2614093

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : +971 543090571 (வாட்ஸ்அப்) / 800 46342 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

11:42 AM, 4 Mar 2026 (IST)

ஹார்முஸ் வழியாக செல்லும் டேங்கர்களுக்கு காப்பீடு

உலகின் முக்கிய நீர்வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக நேற்று ஈரான் அறிவித்திருக்கிறது. மேலும் யாராவது அதை கடந்துசெல்ல முயன்றால், ஈரானின் காவல்படையும் கடற்படையும் சேர்ந்து அந்த கப்பலுக்கு தீவைப்பார்கள் என்று அறிவித்திருந்தது. இதனால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ள நிலையில், வளைகுடா வழியாக கடல்சார் வர்த்தகத்திற்கான அரசியல் ஆபத்து காப்பீட்டை அறிவித்திருக்கிறார் டிரம்ப். அவருடைய ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், இந்த காப்பீடு குறித்து அறிவித்துள்ள அவர், இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். வளைகுடா வழியாக நடைபெறுகிற அனைத்து கடல்சார் வர்த்தகத்துக்கும் அரசியல் ஆபத்து காப்பீடு மற்றும் நிதி பாதுகாப்பிற்கான உத்தரவாதங்களை வழங்க அமெரிக்க மேம்பாட்டு நிதிக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக விரைவில் டேங்கர்களை அழைத்துச்செல்ல தொடங்கும். அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவப்படை உலகில் மிகப்பெரியது என்றும் அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

10:45 AM, 4 Mar 2026 (IST)

ஸ்பெயினுடன் இனிமேல் வர்த்தகம் இல்லை

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல்களுக்கு வட அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் அமைப்பான நேட்டோ ஆதரவு அளிக்கவில்லை. மேலும் செலவினங்களை அதிகரிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே இதனை காரணம் காட்டி, ஸ்பெயின் நாட்டுடனான வர்த்தகத்தை தொடரப்போவதில்லை என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார். “இனிமேல் ஸ்பெயினுடன் எந்த தொடர்பும் இல்லை” என டிரம்ப் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அதற்கு முன்னதாக ராணுவ கூட்டுத்தளங்களை, ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து டிரம்ப் உடனடியாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

10:36 AM, 4 Mar 2026 (IST)

லெபனானில் 4 பேர் உயிரிழப்பு

லெபனானை அடிதளமாக கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், நேற்று லெபனானின் பெய்ரூட் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அறுவுறுத்தி இருந்தது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக்கில் ஒரு கட்டிடத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

Last Updated : March 4, 2026 at 12:59 PM IST