ஈரான் தாக்குதலில் கத்தாரில் பணியாற்றிய இந்தியர் பலி; கடும் பதற்றத்தில் வளைகுடா நாடுகள்

Published : March 2, 2026 at 3:43 PM IST
|Updated : March 2, 2026 at 8:16 PM IST
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கடந்த மூன்று தினங்களாக ஈரான் மீது வான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறித்து தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக துபாய், குவைத், அமீரகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அமெரிக்க அரசுக்கு சொந்தமான இடங்களில் ஈரான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளாக சர்வதேச செஞ்சிலுவை அமைப்புக்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் தாக்குதல் மேலும் தீவிரமடையும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
LIVE FEED
காமேனி மனைவி உயிரிழப்பு
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் மறைந்த ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் மனைவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் படுகாயம் அடைந்த பகர்சாதே இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சவூதி இளவரசருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
மேற்கு ஆசியாவில் நிலவும் நிலைமை குறித்து சவுதி இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு சீனா திடீர் ஆதரவு
ஈரானின் இறையான்மையை காக்க அந்நாட்டுக்கு உரிமை உள்ளதாக சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் சீனாவுக்குமான பாரம்பரிய நட்பை சீனா மதிப்பதாகவும், அது எப்போதும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாக மத்திய கிழக்கு நாடுகள் இருக்கும் நிலையில், சீனா, வட கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தற்போது திடீரென ஈரானுக்கு ஆதரவு தெரிவிப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஈரான் தாக்குதலில் கத்தாரில் பணியாற்றிய இந்தியர் பலி
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க துருப்புக்களை ஈரான் தாக்கி வருகிறது. அந்த வகையில் கத்தாரில் ஈரான் கடந்த மூன்று நாட்களாக அமெரிக்க நிலைகள் மீது பெரிய அளவில் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக ஆயில் டேங்கர் கப்பலை குறிவைத்து இன்று ஈரான் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் அங்கு பணியாற்றிய இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
அமெரிக்க போர் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத்; அதிர்ச்சியில் அமெரிக்கா
குவைத்தில் மூன்று அமெரிக்க போர் விமானங்கள் இன்று விழுந்து நொறுங்கியது. ஈரான் தாக்குதலால் விமானம் நொறுங்கியதா? என்று சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. குவைத் வான் வெளியில் பறந்த அமெரிக்காவின் மூன்று F15 விமானங்களை, ஈரானிய விமானங்கள் என்று நினைத்து குவைத் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியது தற்போது தெரியவந்துள்ளது. விமானத்தில் பயணித்த 6 விமானிகள் பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கியதாகவும் குவைத் அரசு அறிவித்துள்ளது.
தாக்குதலில் 555 ஈரானியர்கள் பலி; வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 555 ஈரானியர்கள் பலியாகியுள்ளதாக ஈரான் ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. 131 நகரங்களில் போர் பாதிப்பு தொடர்வதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பதுங்குக்குழியில் ட்ரோன்கள்: அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்
அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான சண்டையில் தீவிரம் காட்டி வரும் ஈரான், தங்கள் நாட்டில் ட்ரோன்கள் பாதுகாக்கப்பட்டுள்ள அறைகளின் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது அனைத்தும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் மீதான பதில் தாக்குதலுக்கானது என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
நெதன்யாகு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. நெதன்யாகு உயிரோடு உள்ளாரா? இல்லையா? என்பது தெரியவில்லை என்றும் அந்நாடு விளக்கமளித்துள்ளது.

