ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழப்பு: 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

Published : February 28, 2026 at 3:40 PM IST
|Updated : March 1, 2026 at 8:41 AM IST
ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்த அமெரிக்க பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால் எந்நேரமும் ஈரான் மீது அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுடன் இணைந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஈரானும் ஒரே நேரத்தில் 35 முதல் 70 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. எனினும், இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பானது அதனை தடுத்து வருகிறது.
LIVE FEED
ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழப்பு
அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி அறிவித்துள்ளது. மேலும், உச்ச தலைவர் காமேனி கொலை செய்யப்பட்ட நிலையில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் ஈரான் அரசு அறிவித்துள்ளது. 7 நாள்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களிடம் காமேனி விரைவில் உரை: ஈரான் அரசு அதிரடி
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டு உச்ச தலைவர் காமெனி உயிரிழந்ததாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. ஆனால், இதை ஈரான் வெளியுறவுத்துறை மறுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், யூகங்களை உடைக்கும் வகையில், விரைவில் நாட்டு மக்களிடம் காமேனி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: இந்திய தூதரகம்
போர் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் இந்திய பயணிகளை கவனித்துக் கொள்வதற்காக இந்திய தூதரக அதிகாரிகள், ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் எனவும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் Vs அமெரிக்கா மோதல்: ஐ.நா பொதுச் செயலாளர் கண்டனம்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைபலத்தைப் பயன்படுத்துவதும், அதைத் தொடர்ந்து பிராந்தியம் முழுவதும் ஈரான் பழிவாங்குவதும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை குறைத்துள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
போர் சூழல் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது - இந்திய வெளியுறவுத்துறை
மத்திய கிழக்கில் நிகழும் போர் சூழல் ஆழந்த கவலை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைபிடிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: ராகுல் காந்தி
ஈரான் மீதான போர் கவலை அளிப்பதாக மக்களவைத் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளது.
துபாய், அபுதாபியை விட்டு வெளியேற அந்நாட்டு மக்களுக்கு ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக துபாய், அபுதாபியை விட்டு வெளியேற அந்நாட்டு மக்களுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதலுக்கு சிபிஎம் கண்டனம்
ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலுக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், உடனடியாக தாக்குதலை இரண்டு நாடுகளும் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்: ரஷ்யா வலியுறுத்தல்
ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை வேட்டையாடும் ஈரான்
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி, துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதை ஒரு எக்ஸ் பதிவில், ‘ஹபீபி, நாங்கள் அபுதாபிக்கு வந்துவிட்டோம்’ என ஈரான் ராணுவம் பதிவிட்டுள்ளது.
ஈரானில் 40 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு
அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 40 பள்ளி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இரக்கமற்ற கொடூரர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம் - ஈரான் அறிக்கை
இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் தொடர்பாக முதல் அறிக்கையில் வெளியிட்டிருக்கும் ஈரான், “தங்களை அடிபணிய வைத்துவிடலாம் என எதிரிகள் எண்ணுகின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது. ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறோம்,” என்று அதில் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் ஈரான் மக்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில்,
- ஈரான் மக்கள் எந்த தருணத்திலும் பதற்றமடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- எந்த இடம் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என நினைக்கிறீர்களோ, அந்த இடங்களுக்கு செல்லுங்கள். உங்களுக்கு தேவையான வசதியை நமது ராணுவமும், அரசாங்கமும் செய்து கொடுக்கும்.
- மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, அதுகுறித்து மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
- சூப்பர் மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்
- பள்ளிகள், கல்லூரிகள் மறு அறிவிப்பு வரும் மூடப்பட்டிருக்கும். வங்கிகள் வழக்கம் போல மக்கள் சேவையில் இருக்கும்.
- அரசு அலுவலகங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் பகுதிநேரமாக இயங்கும்.
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியை முழுவதுமாக படிக்க...
அமெரிக்காவுக்கு ஈரான் அச்சுறுத்தல் - காணொளி வெளியிட்ட டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது எக்ஸ் பக்கத்தில் 8 நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளது என்று கூறினார். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து வருவதாகவும், அமெரிக்காவை தாக்க ஏவுகணைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த காணொளியில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஈரானிய மக்களிடம் "உங்கள் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளுமாறு" வேண்டுகோள் விடுத்தார்.
பதிலடி கொடுத்து வரும் ஈரான்
இதற்குப் பதிலடியாக ஈரான் தனது முதற்கட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலை நோக்கித் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஈரான் உரு தெரியாமல் அழிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தஒல்
ஈரான் மீதான இஸ்ரேலின் பயங்கரத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள இந்தியக் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பு அறைகளை அறிந்து வைத்திருக்கும்படியும், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வான்பரப்பை மூடிய ஈரான்; மொபைல் இணைப்புகளும் துண்டிப்பு
ஈரானில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தங்களின் வான்வெளியை முழுமையாக மூடி, மொபைல் போன் சேவைகளைத் அந்நாடு துண்டித்துள்ளது. தெஹ்ரான் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அவசர நிலையை அறிவித்த இஸ்ரேல்
ஈரான் மீது இஸ்ரேல் முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நாடு முழுவதும் உடனடி அவசர நிலையை அறிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல்களை அகற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், நாடு முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கச் செய்துள்ளது.
நிலைமையைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு அறைகளுக்கு அருகிலேயே இருக்குமாறும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு மக்கள் பாதுகாப்பு அறைகளுக்குள் தஞ்சமடைய வேண்டிய கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

