ETV Bharat / international

ஈரான் போர்: கடுமையாக உயரும் கச்சா எண்ணெய் விலை - பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருள்கள் விலையேறும் அபாயம்

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் தெஹ்ரானில் சேதமடைந்த கட்டடம்
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் தெஹ்ரானில் சேதமடைந்த கட்டடம் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 9:06 AM IST

Choose ETV Bharat

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்திவரும் நிலையில், பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல், அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகின்றன. குறிப்பாக, கத்தாரில் உள்ள அமெரிக்காவின் எரிசக்தி தளம் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் போன்றவற்றின்மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, ஈரானின் ஆதரவு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. எனவே பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு 12க்கும் மேற்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கிற அமெரிக்கர்களை வெளியேறுமாறு வெளியுறவுத்துறை வலியுறுத்தி உள்ளது. இதற்கிடையே ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தடுக்க உதவுவதாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் உறுதியளித்துள்ளன.

ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கையாக, ஒரு மாதம் வரை நீடிக்கலாம் அல்லது அதற்கு மேல் செல்லவும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் டிரம்ப். மேலும் ஈரானின் ஏவுகணை தளங்கள், கடற்படையை அழிப்பது, ஈரானுக்கு அணு ஆயுதங்கள் கிடைப்பதை தடுப்பது போன்றவையே தனது நோக்கம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதனிடையே, ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்று கூறியுள்ளார்.

LIVE FEED

5:23 PM, 3 Mar 2026 (IST)

வளைகுடா நாட்டு தலைவர்களுடன் மோடி பேச்சு

ஈரான் தாக்குதலால் முன்னெப்போதும் இல்லாத வகையில், வளைகுடா நாடுகளில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இரண்டாவது நாளாக தொலைபேசியில் பேசினார். குறிப்பாக, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-சபாவுடன் ஈரான் தாக்குதல் தொடர்பாக ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

3:54 PM, 3 Mar 2026 (IST)

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் 787 ஈரானியர்கள் பலி

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 787 ஈரானியர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று 555 ஆக இருந்த உயிரிழப்பு இன்று மேலும் அதிகரித்துள்ளது.

1:41 PM, 3 Mar 2026 (IST)

சேதமடைந்த அணுசக்தி நிலையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களது அணுசக்தி நிலையங்களின்மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டிய நிலையில், இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை செயற்கைகோள் படம்பிடித்துள்ளது. மார்ச் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் Vantor செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த படங்கள் அணுசக்தி நிலையம் எவ்வாறு சேதமடைந்திருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற மோதலில் இஸ்ரேல் இந்த அணுசக்தி நிலையத்தை குறிவைத்து தாக்கியது. தற்போது மீண்டும் அதே கட்டத்தை கடுமையாக நொறுக்கி சேதப்படுத்தியுள்ளது.

ஈரானின் சேதமடைந்த அணுசக்தி நிலையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்
ஈரானின் சேதமடைந்த அணுசக்தி நிலையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் (AFP)

1:28 PM, 3 Mar 2026 (IST)

இஸ்ரேல்-ஈரான் போர்: இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்ன?

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு தாக்குதலால் ஈரானில் குறைந்தது 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரெசன்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது. ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேலில் 11 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் லெபனானில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

12:00 PM, 3 Mar 2026 (IST)

அமெரிக்கா, இஸ்ரேல் Vs ஈரான்: கட்டுக்கடங்காத ஆயுதங்கள் இருக்கு; வெற்றிக்கு இதுவே போதும் - டிரம்ப் பதிவு

ஈரானுடன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவிடம் வரம்பற்ற (Virtually Unlimited) ஆயுதக் இருப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், “அமெரிக்காவின் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர ரக ஆயுதக் இருப்புகள், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் மிக உயர்ந்த அளவிலும், தரத்திலும் உள்ளன. இந்த ஆயுதங்களின் இருப்பு நம்மிடம் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளது.

இதை மட்டுமே பயன்படுத்தி போர்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். கூடுதல் உயர்தர ஆயுதங்கள் பிற நாடுகளில் நமக்காகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் பதிவின் ஸ்கிரீன்ஷாட்
டொனால்ட் டிரம்ப் பதிவின் ஸ்கிரீன்ஷாட் (Truth Social)

10:45 AM, 3 Mar 2026 (IST)

மூன்றாவது நாளாக உயர்ந்து வரும் கச்சா எண்ணெய்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தொடர்வதால், உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக உயர்ந்து வரும் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை இன்றைய வர்த்தக நாளில் சுமார் 2 டாலர்கள் உயர்ந்து 79.84 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இதன்படி, இந்திய பொருள் வணிக வர்த்தகான கமாடிட்டி சந்தையிலும் (எம்.சி.எக்ஸ்) இந்த விலையேற்றம் கடுமையாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய வர்த்தக நாள் முடிவில் எம்.சி.எக்ஸ் கச்சா எண்ணெய் 18 ரூபாய் விலை அதிகரித்து ரூ.6515 என்ற விலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

10:29 AM, 3 Mar 2026 (IST)

லெபனான் மக்களுக்கு எச்சரிக்கை

லெபனானில் டஜன் கணக்கான கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குறிப்பாக, தெற்கு பெய்ரூட்டின் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் உடனடியாக ராணுவ எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் வசிக்கும் பகுதிகளுக்கு அருகேயுள்ள இடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்றும், ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

9:38 AM, 3 Mar 2026 (IST)

தரையிறங்க முடியாமல் திரும்பிய விமானம்

கடந்த மூன்று நாட்களாக சென்னையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 3:50 மணியளவில் 37 பயணிகளுடன் சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானம் துபாய் நோக்கிச் சென்றது. ஆனால், மத்திய கிழக்கில் போர் பதற்றத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அந்த விமானம் சென்னைக்கே மீண்டும் திரும்பி வந்துள்ளது. துபாயில் தரையிறங்கக்கூடிய சூழல் இல்லாத காரணத்தால் விமானத்தை சென்னைக்கு திருப்பி அனுப்பியதாக எமிரேட்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதால் துபாயில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள், நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

9:07 AM, 3 Mar 2026 (IST)

ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையேயான போரானது 4வது நாளாக வேகம் பெற்றுவரும் நிலையில், இன்று சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு டிரான்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருப்பதை சவுதி அரேபிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. தாக்குதலில் பற்றியெரிந்த தீயால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இச்சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்தவர்கள் பலமுறை வெடிசத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.