அயதுல்லா அலி காமேனி உயிரிழப்பு... உறுதி செய்தது ஈரான்
அயதுல்லா அலி காமேனி உயிரிழப்பைத் தொடர்ந்து, ஈரானில் 40 நாட்கள் துக்கமும், 7 நாள்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published : March 1, 2026 at 8:10 AM IST
தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்துள்ளார். இதனை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி அறிவித்துள்ளது. மேலும், உச்ச தலைவர் காமேனி கொலை செய்யப்பட்ட நிலையில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் ஈரான் அரசு அறிவித்துள்ளது. 7 நாள்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
86 வயதான ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை ஈரானின் அரசு தொலைக்காட்சியும் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.
ஈரானிய அரசு தொலைக்காட்சி மற்றும் அரசு நடத்தும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம், காமேனியின் மரணத்தை அவரது வீட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டன. 86 வயதான காமேனி 1989 முதல் ஈரானின் உச்ச தலைவராக இருந்து வந்தார்.
அயதுல்லா காமேனியின் இறப்பு குறித்த அறிவிப்பை தொடர்ந்து, இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் ஒரு மாபெரும் தலைவரை இழந்து விட்டது. ஆன்மத் தூய்மை, நம்பிக்கையின் வலிமை, விவகாரங்களில் விவேகம், ஆணவ சக்திகளுக்கு எதிரான துணிச்சல் மற்றும் இறைவழியில் பாடுபடுதல் ஆகியவற்றில் அவர் தனது காலத்தில் இணையற்றவராகத் திகழ்ந்தார்.
மிகவும் கீழ்த்தரமான பயங்கரவாதிகள் மற்றும் மனிதகுலத்தின் கொலையாளிகளின் கைகளால் அவர் வீரமரணம் அடைந்தது, இந்த மாபெரும் தலைவரின் நேர்மைக்கும் அவரது உளமார்ந்த சேவைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் ஒரு அடையாளமாகும்.
இஸ்லாம் மற்றும் மாபெரும் ஈரானின் பாதையில் வீரமரணம் அடைவது என்பது "வெற்றியின் அடையாளம் மற்றும் இலக்கை நெருங்குவதற்கான ஒரு வழியாகும். இமாம் காமேனி வீரமரணம் அடைந்து இறைவனிடம் மீண்ட போதிலும், அவரது பாதையும் மரபும் முற்றுப்பெறாது, மாறாக அது மிகுந்த வலிமையுடனும் கம்பீரத்துடனும் தொடரும்" என்று IRGC தெரிவித்துள்ளது.

