ETV Bharat / international

உலகின் முக்கிய நீர்வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்; அதிர்ச்சியில் உலக நாடுகள்

ஈரான் ஹர்முஸ் ஜலசந்தியை மூடியதைத் தொடர்ந்து, பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் டெலிவரி தாமதமாகும் என்று வாடிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கின்றன.

ஹர்முஸ் ஜலசந்தியின் செயற்கைக்கோள் படம்
ஹர்முஸ் ஜலசந்தியின் செயற்கைக்கோள் படம் (AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 3:27 PM IST

2 Min Read
Choose ETV Bharat

புது டெல்லி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், உலகின் மிக முக்கிய நீர்வழித்தடமான ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்திருக்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து தொடர்ந்து 4 நாட்களாக ஈரான் மீது சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்துவருகிறது. இந்நிலையில் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றான ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்திருக்கிறது ஈரான்.

மேலும், இந்த ஜலசந்தி வழியாக கடந்துசெல்ல நினைக்கும் கப்பல்களுக்கு தீவைக்கப்படும் அல்லது தாக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஹர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. யாராவது அதை கடந்து செல்ல முயன்றால், எங்களது காவல்படையும், கடற்படையும் அந்த கப்பலுக்கு தீவைப்பார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் இந்த அதிரடி முடிவானது உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், உலகின் 20-30% எண்ணெய் கப்பல்கள் இந்த வழியாகத்தான் வந்துசெல்கின்றன. ஹர்முஸ் ஜலசந்தியானது சுமார் 33 கிலோமீட்டர் அகலம் கொண்டது. உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகாளான சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இந்த ஜலசந்தி இணைக்கிறது.

ஜலசந்தியின் முக்கியத்துவம்

மத்திய கிழக்கின் முக்கிய நீர்வழித்தடமாக விளங்குகிறது ஹர்முஸ் ஜலசந்தி. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகிற எண்ணெய் கப்பல்கள் இந்த வழியாகத்தான் செல்லமுடியும். இந்நிலையில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் தெரிவித்திருக்கிறது.

இருப்பினும் ஈரானின் இந்த முடிவானது ஆசிய - ஐரோப்பிய கப்பல் பாதையை பாதிக்காது என்றாலும், வளைகுடா நாடுகளான குவைத், ஈராக் மற்றும் ஈரானின் கடற்கரைகளை இணைக்கும் ஒரு இடமாக இருக்கிறது. அதேசமயம், உலகின் அனைத்து நீர்வழி வர்த்தகத்திற்கும் அவசியமான வழித்தடமாக ஹர்முஸ் ஜலசந்தி இருந்து வருகிறது. ஏனென்றால் உலகின் 10வது பெரிய கொள்கலன் துறைமுகம் மற்றும் துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தை இணைக்கிறது இந்த ஜலசந்தி.

தற்போது ஈரானின் இந்த நடவடிக்கை குறித்து பிரெஞ்ச் கடல்சார் உயர் நிறுவன இயக்குநர் பால் டூர்ரெட் கூறுகையில், “ஹர்முஸ் ஜலசந்தி எப்போதும் வணிகத்திற்காக திறந்துதான் இருக்கும். 1980 - 1988க்கு இடைப்பட்ட காலத்தில் ஈரான் - ஈராக் இடையே போர் நடைபெற்றபோது எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் அப்போது கூட, இந்த வணிக பாதை திறந்திருந்தது” என்றார்.

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் தொடங்கியதில் இருந்து இத்தாலி, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனாவின் பெரிய கப்பல்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு அந்தந்த நாடுகள் உத்தரவிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, குவைத் அருகே வடக்கே, இந்த கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை ஹர்முஸ் ஜலசந்தியிலிருந்து சற்று தொலைவில்தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரானுக்கு எதிரான போர் வளைகுடா நாடுகள் வரை எதிரொலிப்பது ஏன்? அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமா ஈரான்?

ஹர்முஸ் வழியாக என்னென்ன பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன?

ஹர்முஸ் ஜலசந்தி வழியாக ஜெர்மனியிலிருந்து கார்கள், இயந்திரங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த பொருட்கள் அனுப்பப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டிலிருந்து தானியங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் அனுப்பப்படுகின்றன. இத்தாலியானது உணவு, பளிங்கு மற்றும் மண்பாண்டங்களை ஏற்றுமதி செய்கிறது.

முக்கியமாக, எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தவிர, உலகின் அலுமினிய உற்பத்தியில் 9 சதவீதத்தை இந்த வழியாகத்தான் மத்திய கிழக்கு நாடுகள் அனுப்புகின்றன.

தாமதங்கள் மற்றும் விலை உயர்வு இருக்குமா?

ஈரான் ஹர்முஸ் ஜலசந்தியை மூடியதைத் தொடர்ந்து, பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் டெலிவரி தாமதமாகும் என்று வாடிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, டெமு, ஷீன் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்திருப்பதாக ப்ளூம்பெர்க் தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே கப்பல் நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை விதிப்பதால், சரக்கு கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது ஹர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், தென்னாப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப்பைச் சுற்றி வந்தால், பயண நேரம் 10 நாட்கள் கூடுதலாகும், செலவும் 30 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.