அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதி கைது? கவலை தெரிவித்த நோபல் குழு
நர்கிஸின் கைது மிகுந்த கவலையளிப்பதாக நார்வே நோபல் குழு தெரிவித்திருக்கிறது. மேலும் அவரை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிடவும் கோரிக்கை விடுத்துள்ளது.

Published : December 13, 2025 at 12:52 PM IST
துபாய்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியை ஈரான் அரசு கைது செய்திருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து வடகிழக்கே சுமார் 680 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மஹ்சத் என்ற இடத்தில் மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள 53 வயதான நர்கிஸ் முகமதி சென்றிருந்தார். அங்கு அவரை கைது செய்ததாக நர்கிஸ் பெயரில் இயங்கி வருகிற அறகட்டளை தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையை உள்ளூர் அதிகாரி ஒருவரும் உறுதி செய்திருக்கிறார். ஆனால் அவர் நர்கிஸின் பெயரை குறிப்பிடவில்லை. கடந்த டிசம்பர் 2024 வரை சிறையில் இருந்த நர்கிஸ், மருத்துவ காரணங்களுக்காக தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவல் உண்மையென்றால் அவரை திரும்பவும் சிறையில் அடைக்கபப்டுவாரா? என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.
நர்கிஸின் கைது மிகுந்த கவலையளிப்பதாக நார்வே நோபல் குழு தெரிவித்திருக்கிறது. மேலும் அவரை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிடவும், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நிபந்தனையின்றி அவரை விடுவிக்கக் கோரியும் ஈரானிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டி மரணம்
கோஸ்ரோவ் அலிகோர்டி என்பவர் மஹ்சத்தைச் சேர்ந்த ஒரு மனித உரிமைகள் வழக்கறிஞர். 46 வயதான இவர் இந்த மாத தொடக்கத்தில் தனது அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால் அவருடைய இறப்பை மாரடைப்பு என்று கூறினர். இருந்தாலும் அவரது மரணத்திற்கு பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டன. இது சந்தேகத்தை எழுப்பிய காரணத்தால், 80-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த மரணம் தொடர்பான உண்மையை வெளியிடக் கோரி ஒரு அறிக்கை தயார் செய்து கையெழுத்திட்டனர்.
இதனிடையே அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஆர்வலர்கள் பலர் இன்று (டிச.13) நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக நர்கிஸின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து நியூயார்க்கை சேர்ந்த மனித உரிமைகள் மையத்தின் நிர்வாக இயக்குநர் ஹாடி கெய்மி கூறுகையில், “கோஸ்ரோவிற்கு அஞ்சலி செலுத்தவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்திருப்பது அடிப்படை சுதந்திரங்களை மீறுவதை காட்டுகிறது. எனவே அவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். ஈரான் அரசின் மனித உரிமை சுதந்திரங்களின் மீதான தாக்குதலை இந்த கைது நடவடிக்கை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
நர்கிஸ் முகமதி மீண்டும் கைது செய்யப்படுவாரா?
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் தோன்றியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார் சமூக ஆர்வலரான நர்கிஸ் முகமதி. அரசின் பாதுகாப்பு எதிராக செயல்பட்டதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததாகவும் அவர்மீது ஈரான் அரசு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதுபோன்ற பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளால் நர்கிஸ் மொத்தமாக 13 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இதனிடையே அவருக்கு சிறையிலேயே பல முறை மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் 2022 ஆம் ஆண்டு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போது, அது புற்றுநோயாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கண்டறிந்து நீக்கியதாகவும், இதனால் அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

