வெனிசுலாவுக்கு அத்தியாவசிய தேவையின்றி செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்
வெனிசுலாவில் நடக்கும் விஷயங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவை மிகுந்த கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

Published : January 4, 2026 at 2:02 PM IST
|Updated : January 4, 2026 at 7:36 PM IST
புதுடெல்லி: இந்தியர்கள் வெனிசுலா நாட்டுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க படைகளின் தாக்குதலால் வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருட்களை அமெரிக்காவுக்கு வேண்டுமென்றே கடத்தி மிகப்பெரிய நாசவேலையில் வெனிசுலா ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருந்ததாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவை அமெரிக்க வான் படைகள் சுற்றி வளைத்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் அதிரடியாக அந்நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. அதிநவீன டிரோன் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
இந்த பயங்கர தாக்குதலில் வெனிசுலாவில் 40 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் வெனிசுலா ராணுவம் நேற்று சரணடைந்தது. தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் கைது செய்த அமெரிக்க படைகள், அவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி நியூயார்க் சிறையில் அடைத்தன.
இதையடுத்து, வெனிசுலா முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அத்துடன், அந்நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களை முறைப்படுத்தி வெனிசுலாவின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.
இதனிடையே, அமெரிக்க படைகள் வெனிசுலாவில் குவிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் தாக்குதலால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்தியா தனது கருத்தை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால்வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வெனிசுலாவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் ஆழ்ந்த கவலையை தருவதாக உள்ளன. அந்நாட்டில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக இந்தியா கவனித்து வருகிறது. இந்த தருணத்தில் வெனிசுலா மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல, வெனிசுலாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அவர்களுக்கு உதவி செய்ய வெனிசுலாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர். இந்த நேரத்தில், வெனிசுலாவுக்கு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

