’இந்தியா சக்தி வாய்ந்தது, ராணுவத்தை நவீனமாக்கி வருகிறது’ - அமெரிக்கா புகழாரம்
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா உரையாடல் நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

Published : May 30, 2026 at 11:12 AM IST
சிங்கப்பூர்: இந்தியா சக்தி வாய்ந்தது என்றும், தனது ராணுவத்தை உயர் தர நடவடிக்கைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கி வருவதாகவும் அமெரிக்காவின் போர் துறை செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
புவிசார் பாதுகாப்பு தொடர்பான ஷாங்க்ரி-லா உரையாடல் நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் இந்தாண்டு சுமார் 44 நாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், அமெரிக்காவின் போர் துறை செயலர் பீட் ஹெக்ஸெத் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், "இந்தியா சக்தி வாய்ந்த நாடு. தனது ராணுவ பலத்தை தொடர்ந்து நவீனப்படுத்தி வருகிறது. இந்தியப் பெருங்கடலில் தனது பலத்தை சமநிலையில் வைத்துள்ள இந்தியா, அதற்கான உட்கட்டமைப்பு தயாரிப்பு மற்றும் போக்குவரத்து தேவையை நிவர்த்தி செய்வதன் மூலம் தொடர்ந்து ராணுவத்தை நவீனப்படுத்தி வருகிறது" என்றார்.
ராணுவ திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா உறுதியுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் பாதுகாப்பு சார்ந்த விவகாரத்தில் இந்தியாவுடன், அமெரிக்காவின் உறுதியாக உள்ளது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து, அமெரிக்கா தனது பாதுகாப்பில் தேசிய உற்பத்தி மற்றும் உலகமயமாக்கலை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடான பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவின் உறவை பற்றியும் எடுத்துரைத்தார்.
ஆசிய - பசிபிக் பகுதி உலகின் மிக முக்கியமான பிராந்தியம் என்றும், அப்பிராந்தியத்தின் பாதுகாப்பு சமமற்ற அளவில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அமெரிக்கவின் ராணுவ பலத்தையை ஆசிய நாடுகள் சார்ந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், ஆசிய நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பில் தீவிரமாக முதலீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஆசிய கண்டத்தில் முக்கிய ராணுவ பலமும், நவீன தொழில்நுப்டமும் கொண்ட சீனா குறித்து பேசுகையில், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவு சிறப்பாக உள்ளதகாவும், சீனா உட்பட எந்தவொரு நாடும் மேலாதிக்கத்தைத் திணிக்கவோ, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கவோ முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
உலகளவில் இருக்கும் எரிப்பொருள் தட்டுப்பாடு, மேற்கு ஆசிய போர், இந்தோ-பசிபிக் பிராந்திய உறவில் அமெரிக்காவின் பங்கு ஆகியவற்றுக்கு மத்தியில் அமெரிக்காவின் நிலைபாட்டை பீட் ஹெக்ஸெத் வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

