'அமெரிக்காவுக்கு கனடா தேவையில்லை': கொக்கரித்த அதிபர் டொனால்டு டிரம்ப் - உண்மை என்ன?
இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவின் பெருமளவு வர்த்தகம், கனடாவை சார்ந்தே தான் இருக்கிறது. மெக்சிகோவுக்கு அடுத்து அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருப்பது கனடா தான்.

Published : August 27, 2026 at 9:35 PM IST
டொரோன்டா: அமெரிக்காவுக்கு கனடா தேவை இல்லை; கனடாவுக்கு தான் அமெரிக்கா தேவை என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வரும் நிலையில், அந்நாட்டு பொருளாதார சூழலோ வேறு மாதிரியான கதையை சொல்கிறது.
அண்டை நாடு என்றாலும் சரி, நட்பு நாடு என்றாலும் சரி, தங்களுக்கு லாபம் என்றால் மட்டுமே அந்நாட்டுடன் பரஸ்பர உறவை பேணுவது என்கிற கொள்கையில் டிரம்ப் உறுதியாக இருந்து வருகிறார்.
ஆசிய நாடுகளிலேயே அமெரிக்காவுடன் அதிக அளவில் நட்பு பாராட்டும் இந்தியா மீதே மிகப்பெரிய இறக்குமதி வரியை விதித்து அதிரச் செய்தவர் அதிபர் டொனால்டு டிரம்ப். பிறகு நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து, இறக்குமதி வரி ஓரளவு குறைக்கப்பட்டது வேறு கதை. இந்தியா மட்டுமின்றி இன்னும் பல நாடுகளும் அமெரிக்காவின் இறக்குமதி வரியால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், அதிபர் டிரம்ப்பின் பார்வை தற்போது கனடா பக்கம் திரும்பியுள்ளது. அமெரிக்கா-கனடா இடையேயான வர்த்தகத்தில் கனடாவே பல மடங்கு லாபம் பார்ப்பதாக சமீபகாலமாக டிரம்ப் கூறி வந்தார்.
கனடாவை சீண்டும் டிரம்ப்
இந்த சூழலில்தான், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்துக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவுக்கு திருப்தி ஏற்படாததால் இந்த வரி விதிப்பு அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், 'அமெரிக்காவுக்கு கனடா தேவையில்லை; கனடாவுக்குதான் அமெரிக்கா தேவை' என்கிற கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் அதிபர் டொனால்டு டிரம்ப்.
டிரம்ப் கூறுவது உண்மைதானா? அமெரிக்காவுக்கு கனடா தேவையே இல்லையா?என்கிற சந்தேகம் பலருக்கு வந்திருக்கும். அமெரிக்க வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் ஆராய்ந்து பார்த்தோமேயானால், இதற்கு 'இல்லை' என்பதே பதிலாக வருகிறது.
ஆம், வர்த்தகத்திலும், பொருளாதாரத்திலும் அமெரிக்காவும், கனடாவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.
மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி கனடா
இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவின் பெருமளவு வர்த்தகம், கனடாவை சார்ந்தே தான் இருக்கிறது. மெக்சிகோவுக்கு அடுத்து அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருப்பது கனடா தான்.
குறிப்பாக, மின்சாரம், கச்சா எண்ணெய், உரம், அலுமினியம், கார் பாகங்கள் ஆகியவற்றுக்கு கனடாவையே பெருமளவு சார்ந்திருக்கிறது அமெரிக்கா.
ஒப்புதல் வாக்குமூலம் அளித்த டிரம்ப்
சில வாரங்களுக்கு முன்பு கூட, செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "அமெரிக்காவுக்கு அலுமினியம் மிக அதிகமாக தேவைப்படுகிறது. நம்மிடம் அது இல்லை. கனடாவிடம் இருந்துதான் அலுமினியத்தை பெறுகிறோம்" என ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருந்தார்.
கச்சா எண்ணெய், உரம்
அமெரிக்காவின் மொத்த பெட்ரோலிய தேவையில் 20 சதவீதத்தை, கனடாவிடம் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்தான் பூர்த்தி செய்கிறது. இதனை அமெரிக்க எரிசக்தி துறையே ஒப்புக்கொள்கிறது.
அதேபோல, லட்சக்கணக்கான அமெரிக்க விவசாயிகளுக்கு தேவையான பொட்டாசியம் உரத்தின் பெரும்பகுதியை கனடாவே வழங்கி வருகிறது. அதாவது, அமெரிக்காவின் 80 சதவீதத்துக்கும் மேலான பொட்டாசிய இறக்குமதி, கனடாவையே சார்ந்துள்ளது.
மின்சாரத்தை அள்ளிக்கொடுக்கும் கனடா
அடுத்தபடியாக, ஒரு நாட்டையே முடக்கக்கூடிய விஷயம். அதுதான் மின்சாரம். இந்த விஷயத்திலும் கனடாவை தான் அமெரிக்கா சார்ந்திருக்க வேண்டிய தேவை உள்ளது. கடந்த 2023-இல் மட்டும் அமெரிக்காவின் 85 சதவீத மின்சாரத் தேவையை பூர்த்தி செய்திருக்கிறது கனடா.
தற்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் வல்லரசாக முயற்சிக்கும் அமெரிக்காவுக்கு மின்சாரத்தின் தேவை பல மடங்காக உள்ளது எனும் போது, கனடாவை பகைத்துக் கொள்வது அமெரிக்காவுக்கு நல்லதாக இருக்காது.
அமெரிக்காவை மிரட்ட முடியுமா?
எனவேதான், அமெரிக்காவின் இந்த நெருக்கடிக்கு கச்சா எண்ணெய், மின்சாரம், அலுமினியம் உள்ளிட்டவற்றை காட்டி (மிரட்டி) 'டீல்' பேசலாம் என கனடாவின் ஒருதரப்பு அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.
ஆனால், இயற்கை வளங்களை வைத்து அமெரிக்காவை மிரட்டுவது கனடாவுக்கே ஆபத்தாகிவிடும் என மற்றொரு தரப்பு அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர். மின்சாரம், அலுமினியம், பொட்டாசியத்துக்கு வேறு நாடுகளின் பக்கம் அமெரிக்கா திரும்பிவிட்டால், கனடாவின் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒருபக்கம் இயற்கை வளங்களுக்கு கனடாவை அமெரிக்காவும், நிதி ஆதாரத்துக்கு அமெரிக்காவை கனடாவும் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. அப்படி இருக்கையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த கனடா எதிர்ப்பு போக்கு எத்தனை காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

