ETV Bharat / international

அடுத்தது கிரீன்லாந்து! பெருந்தீவின் மீது கண் வைக்கும் டிரம்ப்; ஐரோப்பிய தலைவர்கள் விடுத்த எச்சரிக்கை

‘கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது’ என்று ஐரோப்பியத் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கிரீன்லாந்தில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேட்டோ படைகள்
கிரீன்லாந்தில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேட்டோ படைகள் (AP Photo/Ebrahim Noroozi)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 5:29 PM IST

2 Min Read
Choose ETV Bharat

வாஷிங்டன்: கிரீன்லாந்தைக் கையகப்படுத்தும் டிரம்பின் யோசனைக்கு ராணுவ நடவடிக்கைகள் உதவியாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதற்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசப்படுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். இதற்காக அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்துவது ‘எப்போதும் ஒரு சாத்தியமான வழிதான்’ என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. டிரம்பின் இந்த பேச்சுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பு செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில், கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியமானது என்றும், குறிப்பாக ஆர்க்டிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ரஷ்ய மற்றும் சீன நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு இது அவசியம் என்றும் அதிபர் டிரம்ப் நம்புவதாகத் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க அரசு பல மாற்று வழிகள் குறித்து சிந்தித்தும், விவாதித்தும் வருவதாகவும், ராணுவ நடவடிக்கை அவற்றில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தலைவர்கள் கண்டனம்

கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒரு தன்னாட்சிப் பிரதேசமாக விளங்குகிறது. மேலும் டென்மார்க் அமெரிக்கா உட்பட பல நாடுகளைக் கொண்ட நேட்டோ ராணுவ படையில் உறுப்பினராக உள்ளது. இதன் காரணமாக, கிரீன்லாந்திற்கு எதிரான எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் மிகவும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில், டிரம்பின் யோசனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போலந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள், டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனுடன் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது’ என்றும், அதன் எதிர்காலத்தை கிரீன்லாந்தும் டென்மார்க்கும் மட்டுமே தீர்மானிக்க முடியும் எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கனடா பிரதமர் மார்க் கார்னி, கிரீன்லாந்தின் எதிர்காலம் அதன் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறி, மூத்த கனடியத் தலைவர்கள் விரைவில் கிரீன்லாந்திற்கு வருகை தருவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குள்ளும் இதுதொடர்பாக பல கருத்துகள் எதிரொலித்து வருகின்றன. குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சபைத் தலைவர் மைக் ஜான்சன், ராணுவ நடவடிக்கை பொருத்தமற்றது என்று கூறியுள்ளார். டிரம்பின் துணைத் தலைமைப் பணியாளர் ஸ்டீபன் மில்லர், கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று கூறியதுடன், இப்போதைக்கு ராணுவ நடவடிக்கை பற்றிப் பேசத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

ஆர்டிக் பகுதியில் கிரீன்லாந்து அமைந்துள்ளதாலும், அங்கு பனி உருகுவதால் கப்பல்களின் போக்குவரத்துக்கான அணுகல் அதிகரித்துள்ளதாலும், அது தங்களுக்கு பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் டிரம்ப் கருதுகிறார். ரஷ்யாவும் சீனாவும் அங்கு தங்கள் இருப்பை விரிவுபடுத்துகின்றன என்று அவர் தன் வாதத்தை முன்வைத்துள்ளார்.

கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ் ஃபிரடெரிக் நீல்சன், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று, கிரீன்லாந்தின் நூக் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார்
கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ் ஃபிரடெரிக் நீல்சன், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று, கிரீன்லாந்தின் நூக் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் (Oscar Scott Carl/Ritzau Scanpix via AP)

என்னென்ன காரணங்களுக்காக கிரீன்லாந்து முக்கியத்துவம் பெறுகிறது?

  • இது ஏவுகணைகள் மற்றும் விண்வெளி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தைக் கொண்டுள்ளது.
  • இது நேட்டோ அமைப்பு ரஷ்ய கடற்படை நகர்வுகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தும் ஒரு முக்கியப் பகுதியான ஜிஐயுகே இடைவெளிக்கு (GIUK Gap) அருகில் அமைந்துள்ளது.
  • இதில் அரிய வகை கனிமங்கள் உள்ளன. அவை கைபேசிகள், மின்கலங்கள், சூரிய மின்சக்தி தகடுகள் மற்றும் காற்றாலை ஆற்றலுக்கு மிகவும் அவசியமானவை.
  • இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

டிரம்பின் ஆசை இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய கூட்டணியை சிதைத்துவிடும் என்று டேனிஷ் பிரதமர் ஃபிரடெரிக்சன் எச்சரித்துள்ளார். அவர் மேலும், “கிரீன்லாந்தின் மீது அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலும் நேட்டோ மீதே நடத்தப்படும் தாக்குதலாகக் கருதப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பதவியேற்றார் டெல்சி ரோட்ரிகஸ்

இந்நிலையில் தங்கள் அரசாங்கம் அமெரிக்காவுடன் நல்லுறவை விரும்புகிறது என்றும், உடனடியாக கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வாய்ப்பு இல்லை எனவும் கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் கூறினார்.

கிரீன்லாந்து ஒரு காலத்தில் டேனிஷ் காலனியாக இருந்தது. ஆனால், 2009-இல் தன்னாட்சியைப் பெற்றது. அதன் மக்கள் சுதந்திரமாக செயல்பட சட்டப்பூர்வ உரிமையும் அதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.