பிரான்ஸ் தேர்தல்: நீதிமன்ற தீர்ப்பால் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் அதிபர் வேட்பாளர்
பிரான்ஸ் நாட்டின் சட்டப்படி, வீட்டுக்காவலில் வைக்கப்படுவோர், தங்கள் கையில் எலக்ட்ரானிக் கண்காணிப்பு வளையத்தை அணிந்திருக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியை பெற்ற பிறகே, அவர்களால் பிற இடங்களுக்கு செல்ல முடியும்.

Published : July 8, 2026 at 8:36 PM IST
பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வலதுசாரி தலைவரான மரீன் லெ பென், நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளானதால் அவர் எலக்ட்ரானிக் கண்காணிப்பு வளையத்தை (Electronic monitor Bracelet) கையில் அணிந்தபடி பிரச்சாரம் மேற்கொள்வார் என தெரிகிறது.
இது நடக்கும்பட்சத்தில், அதிபர் தேர்தல் வேட்பாளர் ஒருவர், கையில் கண்காணிப்பு வளையத்தை அணிந்தபடி பிரச்சாரம் செய்தது பிரான்ஸ் வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாக இருக்கும்.
பிரான்ஸ் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தீவிர வலதுசாரி கட்சியான 'நேஷனல் ரேலி' (National Rally) கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர் மரீன் லெ பென் போட்டியிடுகிறார்.
தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான், வரும் தேர்தலில் போட்டியிட முடியாததால், அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவரான மரீன் லெ பென் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பண மோசடியில் சிக்கிய மரீன லெ பென்
இது ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய யூனியனின் பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக மரீன் லெ பென் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த பாரீஸ் நீதிமன்றம், மரீன் லே பென் மீதான குற்றச்சாட்டை கடந்த ஆண்டு உறுதி செய்து, அவரை குற்றவாளியாக அறிவித்தது. மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் விதித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, பாரீஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மரீன் லே பென் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) விசாரித்த நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது.
தேர்தலில் போட்டியிடும் தடை நீக்கம்
எனினும், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடையை 15 மாதங்களாக குறைத்தது. 3 ஆண்டு சிறைத்தண்டனையில் 2 ஆண்டுகளை நிறுத்தி வைத்தது.
இந்த தீர்ப்பின் மூலம் மரீன் லெ பென், வரும் அதிபர் தேர்தில் போட்டியிடுவதற்கான தடை நீங்கியுள்ளது. அதே சமயம், மீதமுள்ள ஓராண்டு சிறைத்தண்டனையை அவர் வீட்டுக் காவலில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கையில் எலெக்ட்ரானிக் வளையம் அணிவாரா?
பிரான்ஸ் நாட்டின் சட்டப்படி, வீட்டுக்காவலில் வைக்கப்படுவோர், தங்கள் கையில் எலெக்ட்ரானிக் கண்காணிப்பு வளையத்தை அணிந்திருக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியை பெற்ற பிறகே, அவர்களால் பிற இடங்களுக்கு செல்ல முடியும். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்காணிப்பு வளையத்தின் மூலமாக போலீசார் தெரிந்து கொள்வர்.
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, மரீன் லெ பென்னும் கையில் எலெக்ட்ரானிக் கண்காணிப்பு வளையத்தை அணிந்து, பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மரீன் லெ பென் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளார். இதில், தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், கண்காணிப்பு வளையத்தை தான் அணிய வேண்டிய நிலை ஏற்படாது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

