'வெனிசுலாவை இனி நாங்கள் ஆட்சி செய்வோம்' - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் நியூயார்க் தடுப்பு மையத்தில் அமெரிக்க படைகள் அடைத்து வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : January 4, 2026 at 9:09 AM IST
வாஷிங்டன்: வெனிசுலாவை இனி அமெரிக்கா ஆட்சி செய்யும் என அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். வெனிசுலா மீது அதிரடி தாக்குதலை நடத்தி அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் சிறைப்பிடித்த நிலையில், இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்குள் வெனிசுலா நாட்டில் இருந்து படகுகள் மூலமாக போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தபட்டு வருவதாகவும், இதற்கு அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதன் தொடர்ச்சியாக, வெனிசுலாவை அமெரிக்க படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுற்றி வளைத்தன. தொடர்ந்து, வெனிசுலா கடற்கரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகளை தாக்கி அழித்ததாகவும், அவற்றில் முழுக்க முழுக்க போதைப்பொருட்கள் இருந்ததாகவும் அமெரிக்க படைகள் அறிவித்தன.
இதனிடையே, கடந்த வியாழக்கிழமை வீடியோ ஒன்றினை அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ வெளியிட்டார். அதில், "வெனிசுலாவில் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, இங்குள்ள எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதே அமெரிக்காவின் நோக்கம். இதற்காக தனது ராணுவப் படைகளை அது பயன்படுத்துகிறது" என நிகோலஸ் மதுரோ குற்றம்சாட்டினார்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு, வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்த அமெரிக்க போர் விமானங்கள், தலைநகர் கராகஸ் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது. டிரோன்கள் மூலமாகவும் ராணுவத் தளங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 40 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர தாக்குதலை சமாளிக்க முடியாமல் வெனிசுலா ராணுவம் அமெரிக்க படையிடம் நேற்று சரணடைந்தது.
இதையடுத்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோரை அமெரிக்க படையினர் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் போர் விமானம் மூலமாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, நியூயார்க் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| இதையும் படிங்க: வட மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்பட வேண்டும் என திமுக திட்டமிடுகிறதா? எச்.ராஜா கேள்வி |
இது ஒருபுறம் இருக்க, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைவிலங்கிடப்பட்டு போலீசாரால் அழைத்து செல்லப்படும் புகைப்படத்தை அமெரிக்கா நேற்று வெளியிட்டது. இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில், இதுதொட்ரபாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "நாங்கள் வெனிசுலாவில் ஆட்சி நடத்த போகிறோம். முதலில் அங்குள்ள எண்ணெய் வளங்களை முறைப்படுத்தி, அதன் மூலம் பணம் ஈட்டி அந்நாட்டின் வளர்ச்சிக்கு கொடுக்க போகிறோம். வெனிசுலாவில் அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது. வெனிசுலா மக்களின் நலனை யார் விரும்புகிறார்களோ, அவர்களை ஆட்சியில் அமர்த்த போகிறோம். முன்னதாக அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் வெனிசுலா படைகள் நிலைக்குலைந்து போய்விட்டன. நேற்றைக்கு அமெரிக்கா செய்த சாதனையை போல உலகில் வேறு எந்த நாடும் சாதித்ததில்லை" என டிரம்ப் கூறினார்.
இதனிடையே, வெனிசுலாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று நியமனம் செய்துள்ளது.

