ETV Bharat / international

இலங்கை சிறையில் 2-வது நாளாக வன்முறை: ஆயுதக் கிடங்கை சூறையாடிய கைதிகள் - அதிகாரிகள் உட்பட 20 பேர் பலி

1,800 பேர் மட்டுமே அடைக்கப்பட வேண்டிய இந்தச் சிறையில், தற்போது 2,400-க்கும் மேற்பட்ட கைதிகள் வைக்கப்பட்டிருப்பதே வன்முறை இவ்வளவு தீவிரமடையக் காரணம் எனக் கூறப்படுகிறது.

நீர்க்கொழும்பு சிறை முன் குவிக்கப்பட்டுள்ள போலீசார்
நீர்க்கொழும்பு சிறை முன் குவிக்கப்பட்டுள்ள போலீசார் (AP)
author img

By AP (Associated Press)

Published : July 6, 2026 at 3:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கொழும்பு: இலங்கையின் மேல் மாகாண கடலோரப் பகுதியான நீர்க்கொழும்பு (Negombo) மத்திய சிறைச்சாலையில், நேற்று ஏற்பட்ட வன்முறை 2-வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில் சிறை அதிகாரிகள், கைதிகள் என 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறைச்சாலைக்குள் சட்ட விரோதமாக போதைப்பொருள் கடத்துவதை ஆதரிக்கும் ஒரு குழுவிற்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றொரு கைதிகள் குழுவிற்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) மதியம் திடீரென மோதல் வெடித்தது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தவர் என ஒருவரை சக கைதிகள் தாக்கியதே கலவரத்தின் ஆரம்பப்புள்ளி என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிலைமை கட்டுக்குள் வந்ததாக அதிகாரிகள் நினைத்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் வன்முறை வெடித்தது. சிறை வளாகத்திற்குள் உள்ள அறைகளில் இருந்த இரும்பு ஆயுதங்களுடன் திரண்ட நூற்றுக்கணக்கான கைதிகள், சிறையின் ஆயுதக் கிடங்கை உடைத்து சூறையாடினர்.

அங்கிருந்த தானியங்கி துப்பாக்கிகளை கைப்பற்றிய கைதிகள், வளாகத்திற்குள் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். நிலைமை கைமீறிச் சென்றதால், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் விரைந்து வந்த சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் வன்முறையை கட்டுப்படுத்த கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வன்முறையில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் என 20 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கலவரத்தின் ஒரு பகுதியாக, சிறையிலுள்ள பழைய கட்டடங்களின் கூரை மீது ஏறி ஆண் மற்றும் பெண் கைதிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகளின் பாரம் தாங்காமல் அதில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், 4 பேர் படுகாயமடைந்தனர்.

தற்போது நீர்க்கொழும்பு சிறையைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மற்றும் கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ட்ரோன் கேமராக்கள் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

1,800 பேர் மட்டுமே அடைக்கப்பட வேண்டிய இந்தச் சிறையில், தற்போது 2,400-க்கும் மேற்பட்ட கைதிகள் வைக்கப்பட்டிருப்பதே வன்முறை இவ்வளவு தீவிரமடையக் காரணம் எனக் கூறப்படுகிறது.

நீதித்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உத்தரவின் பேரில், சிறைச்சாலைகளின் தலைமை ஆணையர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்கள் கொழும்பு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். சிறை வளாகத்தின் வெளியே கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் திரண்டுள்ளதால் அந்தப் பகுதி முழுவதும் பதற்றமாக காணப்படுகிறது.

நீர்க்கொழும்பு பகுதி இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள ஒரு கடலோர நகரமாகும். இந்த மாவட்டத்திலும், இந்தச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.