ETV Bharat / international

'பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே இனி அமெரிக்க குடியுரிமை?' - டிரம்பின் 'தங்க அட்டை' திட்டத்துக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள 'தங்க அட்டை' திட்டத்தில் குடியுரிமை பெற ஒரு தனிநபர் இந்திய ரூபாய் மதிப்பில் 9 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.

டிரம்ப் தங்க அட்டையின் போஸ்டர்
டிரம்ப் தங்க அட்டையின் போஸ்டர் (AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 12, 2025 at 6:08 PM IST

2 Min Read
Choose ETV Bharat

வாஷிங்டன்: வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்களுக்கு அமெரிக்க குடியுரிமையை வழங்க வகை செய்யும் 'தங்க அட்டை' (Gold Card Program) திட்டம் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு வழங்கும் இந்தத் திட்டத்தின் மூலம் குடியுரிமை பெறுவதற்கு ஒரு தனிநபர் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களும், (இந்திய ரூபாய் மதிப்பில் 9 கோடி), தனியார் பெருநிறுவனங்கள் இரண்டு மில்லியன் டாலர்களும் கட்டணமாக செலுத்த வேண்டி வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் 1990-இல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட EB-5 (Employment -Based Fifth Preference) விசா வழங்கும் திட்டத்துக்கு மாற்றாக இந்த தங்க அட்டை திட்டம் கருதப்படுகிறது. பெருநிறுவனங்களின் முதலாளிகள் புடைசூழ வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தத் திட்டத்தை அதிபர் டிரம்ப் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது, "இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி அமெரிக்க அரசின் கருவூலத்திற்கு செல்லும் எனவும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்" என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

"இந்த தங்க அட்டையானது, வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டை விட சிறந்தது மற்றும் திறன் வாய்ந்தது" எனவும் அவர் கூறினார்.

ஆனால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள EB -5 விசா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெருநிறுவனங்கள், இப்புதிய திட்டத்தின் கீழ் உருவாக்க வேண்டிய மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை குறித்தோ, இத்திட்டத்தில் அதிகபட்சமாக மொத்தம் எவ்வளவு விசாக்கள் வழங்கப்படும் என்பது பற்றியோ துவக்க நிகழ்வில் டிரம்ப் எதுவும் குறிப்பிடவில்லை.

மாறாக, "அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் படிப்பை முடித்தப்பின், அமெரிக்காவில் தொடர்ந்து தங்குவதில் சட்டசிக்கல் உள்ளதால், திறன்வாய்ந்த மாணவர்களை பணிக்காக தங்களால் எடுக்க இயலவில்லை என்ற பெருநிறுவன முதலாளிகளின் முறையீட்டை தான் காது கொடுத்து கேட்டதாகவும், அதன் காரணமாகவே குடியுரிமையை எளிதாக்கும் தங்க அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்கான தங்க அட்டை திட்டத்தில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களை சரிபார்ப்பது, விண்ணப்பதாரரின் பின்னணி குறித்து விசாரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மட்டும் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுவதாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளைச் சேர்ந்த திறன்வாய்ந்த மாணவர்களை அமெரிக்க தொழில் நிறுவனங்கள் தக்கவைத்துக் கொள்ள இந்தத் திட்டம் ஒரு வரபிரசாதமாகும் என்று அவர் வர்ணித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் தற்போது நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள (Green Card Holders) வெளிநாட்டினரின் வருமானம், சராசரி அமெரிக்கர்களைவிட குறைவாகவே உள்ளது. இந்த நிலையை இந்த புதிய திட்டம் மாற்றும் எனவும் அமைச்சர் லுட்னிக் தெரிவித்தார்.

தனது நீண்டநாளைய வாக்குறுதியான வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான தங்க அட்டையை பெறுவதற்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறிக் கொண்டிருந்தார். தற்போது தனிநபர் ஒருவர் குடியுரிமை பெற இத்திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் எனவும், பெருநிறுவனங்கள் இரண்டு மில்லியன் டாலர்கள் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் இந்தப் புதிய திட்டத்துக்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், மறுபுறம் விமர்சன குரல்களும் எழுந்துள்ளன.

இந்தத் திட்டம் அமெரிக்க அரசாங்கத்திற்கு பணத்தை ஈட்டுவதற்கான ஒரு வழிமுறையே அன்றி வேறொன்றுமில்லை. தன் அரசாங்கத்தின் மீது கோபத்தில் இருக்கும் நாட்டு மக்களின் மனநிலையை டிரம்ப் புரிந்துக்கொள்ளவில்லை. ஒரு சாதாரண குடிமகனிடம் ஒரு மில்லியன் டாலர் இருப்பது சாத்தியமில்லை என்று சமூக வலைதளத்தில் ஒருவர் விமர்சித்துள்ளார்.

தங்க அட்டை திட்டத்தின் கீழ், விசா பெறுவதற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர். விண்ணப்பக் கட்டணம் 15 ஆயிரம் டாலர். இதன் மூலம் பணம் படைத்தவர்கள் மட்டுமே அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்கான வழிமுறையை டிரம்ப் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று மற்றொரு இணையவாசி விமர்சனம் செய்துள்ளார்.