கலவர வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்த வன்முறையில் 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Published : November 17, 2025 at 4:03 PM IST
டாக்கா: வங்கதேச வன்முறை வழக்கில் அந்த நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வங்க தேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் ஏற்பட்டு வங்கதேசமே கலவரக்காடானது. நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை ஒடுக்க பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
பல இடங்களில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். குறிப்பாக நாடு முழுவதும் நடைபெற்ற இந்த வன்முறையில் 1400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கலவரக்காரர்களை சுட்டுக் கொல்ல ஷேக் ஹசீனா உத்தரவிட்டதாக ஆடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். கடந்த ஓராண்டாக அவர் இந்தியாவில் தங்கியுள்ளார். இந்தியாவில் அவர் எங்கே உள்ளார் என்பது தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே, வங்கதேச கலவரத்தில் 1400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை அளித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

