ETV Bharat / international

நடுங்க வைத்த ஆஸி., துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியது முதலாகவே, ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

போண்டி கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
போண்டி கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 15, 2025 at 12:20 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நேற்று (டிச.14) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தந்தை - மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலேயாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை, எப்போதுமே மக்கள் அதிகம் கூடும் பகுதி ஆகும். அதிலும், நேற்று ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய கடல் திருவிழாவான 'சானுக்கா' கொண்டாட்டங்கள் நடைபெற்றதால், ஆயிரக்கணக்கானோர் கடற்கரையில் கூடி கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த 2 பேர், திடீரென துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினர். துப்பாக்கி சத்தத்தை கேட்டதும், அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என நேற்று வரை 9 பேர் வரை உயிரிழந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: 'இருக்கு... பில்லி சூனியம் இருக்கு'... பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு

தந்தை - மகன்!

இதனிடையே, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் சுட்டதில் 50 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். 24 வயதான இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் தந்தை - மகன் என்பது தெரியவந்துள்ளது. எனினும், அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

முதற்கட்ட விசாரணையில், இது யூத மக்களுக்கு எதிரான தாக்குதல் என்பது தெரியவந்துள்ளதாக சிட்னி காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், ஆனால் பல வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்ததும் தெரியவந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

குறிவைக்கப்படும் யூதர்கள்!

ஆஸ்திரேலியாவில் மொத்தமுள்ள 2 கோடியே 10 லட்சம் மக்கள் தொகையில், 1 லட்சத்து 17 ஆயிரம் யூதர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே யூத மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அந்நாட்டில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஏற்பட்ட பிறகு, யூதர்களுக்கு எதிரான தாக்குதல் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.