ETV Bharat / international

இஸ்ரேல் - ஈரான் போர்: 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா முதலிடம் அளிப்பதாகத் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், தேவைப்பட்டால் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கும் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது.

போரை நிறுத்தும்படி அமெரிக்காவிற்கு எதிராக பதாகை ஏந்தியிருக்கும் நபர்
போரை நிறுத்தும்படி அமெரிக்காவிற்கு எதிராக பதாகை ஏந்தியிருக்கும் நபர் (AP Photo/George Walker IV)
author img

By Aroonim Bhuyan

Published : March 4, 2026 at 3:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

இங்கு வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இது தொடர்பாக முக்கிய அறிக்கையை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கிய நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், “புனித ரமலான் மாதத்தில் போர் தீவிரமடைந்திருப்பது வருத்தத்திற்குரியது. இந்த பகுதியில் அமைதி சீர்குலைவது இந்தியாவுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

போர் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு, பொருளாதார நடவடிக்கைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய கிழக்குகளில் அதிக இந்தியர்கள் வசிப்பதால், அவர்களின் நிலை குறித்து குடும்பத்தினர் பெரும் கவலையடைந்து வருகின்றனர்.

இந்தியர்களின் பாதுகாப்பு

மத்திய கிழக்கில் இருக்கும் வளைகுடா நாடுகளில் (துபாய், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், பஹ்ரைன், சார்ஜா, அபுதாபி) சுமார் ஒரு கோடி இந்திய குடிமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடமிருந்து வரும் அந்நியச் செலாவணி இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (X/@DrSJaishankar)

அவர்களின் பாதுகாப்பிற்கு இந்தியா முதலிடம் அளிப்பதாகத் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், தேவைப்பட்டால் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பொருளாதார பாதிப்பு

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20 விழுக்காட்டை கையாளும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) எனும் கடல் வழி வணிக தளத்தை, ஈரான் முடக்கியுள்ளது. இதன் வழியாக இந்தியா தினசரி 26 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

அந்த வகையில், இந்தப் போக்குவரத்து முடக்கம் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் சில இந்தியர்கள் உயிரிழந்துள்ளதற்கும் இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் இந்தியா வலுவான பாதுகாப்பு உறவைக் கொண்டுள்ளது. அதே சமயம், ஈரான் இந்தியாவின் முக்கியமான எரிசக்தி மற்றும் வர்த்தகப் பங்காளியாக உள்ளது. எனவே, எந்த ஒரு பக்கமும் சாயாமல் ‘பேச்சுவாத்தை மூலம் தீர்வு’ என்பதை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் சுக்குநூறாகத் தகர்ந்துபோன பள்ளிக் கட்டடம்
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் சுக்குநூறாகத் தகர்ந்துபோன பள்ளிக் கட்டடம் (AP)
இதையும் படிங்க: ஈரான் அரசாங்கத்தில் இருக்கும் ஒருவரே ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு: டொனால்டு டிரம்ப்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அங்குள்ள இந்திய தூதரகங்கள் இந்தியர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றன. எனவே, நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் இந்தியா அடுத்தக்கட்ட முடிவுகளை எடுக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.