ETV Bharat / international

மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதல்; பதிலடியை தொடங்கிய ஈரான்

ஈரான் ஒரே நேரத்தில் 35 முதல் 70 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவிய நிலையில், இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பானது அதனை தடுத்து வருகிறது.

ஈரான் மீதான தாக்குதல்
ஈரான் மீதான தாக்குதல் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 28, 2026 at 2:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. நீங்கள் தொடங்கி விட்டீர்கள், இனி முடிவு எங்கள் கையில் என ஈரான் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக போர் பதற்றம் நிலவிவந்த நிலையில், இன்று திடீரென்று ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்தி வருகின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இன்று காலை ஈரான் அதிபர் மாளிகை அருகில் மட்டும் 7 ஏவுகணைகளை வீசியுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

குறிப்பாக, அந்நாட்டின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனி வசிக்கும் பகுதிகளான தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கார்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் இந்த தாக்குதலுக்கு ’லயன்ஸ் ரோர்’ (Lion's Roar) என பெயரிட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இப்போர் தாக்குதல் குறித்து முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஈரானால் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்கவோ வைத்திருக்கவோ முடியாது. ஈரான் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவை காப்போம். மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கியுள்ளது.

நேற்று இரவு வரை ஈரானை தாக்கும் முடிவை எடுக்கவில்லை. ஈரானின் அனைத்து ஏவுகணைகளையும் அழித்து தரைமட்டமாக்குவோம். ஈரான் ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலை அழிக்கப்படும். அதன் கடற்படையும் முற்றிலும் அழிக்கப்படும். போரில் நல்லது கெட்டது இரண்டும் உள்ளது. இன்று இரவுக்குள் ஈரான் அரசை கைப்பற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 17 ஒப்பந்தங்களுடன் முடிந்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்: என்னென்ன சிறப்புகள்?

ஈரானின் தலைநகரான தெஹ்ரான் முழுவதும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் மொபைல், இணையதள சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

போர் பதற்றத்தை தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. இரு நாடுகளிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் பதற்றத்தால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதவிக்கான மின்னஞ்சல், தொலைபேசி எண்களையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் திடீரென தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளுக்கும் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும், நீங்கள் தொடங்கி வைத்துவிட்டீர்கள். இனி முடிவு உங்கள் கையில் இல்லை என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலை துவங்கியுள்ளது. ஒரே நேரத்தில் 35 முதல் 70 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவிய நிலையில், இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பானது அதனை தடுத்து வருகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தின் மீது ஈரான் கையெழுத்திட டிரம்ப் அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், ஈரான் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது போர் வெடித்துள்ளது.