அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்த 30 இந்தியர்கள் கைது
அமெரிக்காவில் வணிக லாரிகளை இயக்கி சாலையில் விபத்துகளை ஏற்படுத்தியதுடன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய இந்திய வம்சாவளி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published : June 2, 2026 at 11:10 AM IST
நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (US Customs and Border Protection) வெளியிட்ட அறிக்கையில், "அரிசோனாவின் யூமா செக்டாரை சேர்ந்த எல்லை ரோந்துப் படையினர் 'ஆபரேஷன் செக்மேட்' (Operation Checkmate) என்ற தலைப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் கீழ் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 36 பேர் செமி ட்ரக் எனப்படும் லாரிகளில் ஓட்டுநர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்; மற்ற ஆறு பேர் மெக்சிகோ, எல் சால்வடார் (El Salvador) மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்டவர்கள் நியூயார்க், வாஷிங்டன் டிசி, கலிஃபோர்னியா மற்றும் விர்ஜீனியா மாநிலங்களில் வர்த்தக ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்தனர். அதே சமயம், சிலரிடம் எந்தவித ஓட்டுநர் உரிமமும் இல்லை. பெரும்பாலானோர் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பிற்கான அங்கீகார ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.
தற்போது அந்த ஆவணங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது. சட்டத்தின் படி அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆப்ரேஷன் செக்மேட்' என்பது அமெரிக்காவில் வணிக ரீதியிலான லாரிகளை முறையான ஆவணங்களின்றி இயக்கும் ஓட்டுநர்களைச் சட்டவிரோதமாகக் கண்டறிந்து கைது செய்து பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையின் யூமா பிரிவின் தற்காலிக தலைமை ரோந்து அதிகாரி டஸ்டின் காடில் (Chief Patrol Agent of the US Border Patrol’s Yuma Sector Dustin Caudle) தெரிவித்ததாவது, "பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாகவும், முறையான ஓட்டுநர் இல்லாமல் சட்டவிரோதமாக வணிக ரீதியிலான லாரிகளை இயக்கும் நபர்களால் ஏற்படும் சாலை விபத்துகளைக் குறைக்கும் விதமாகவும், 'ஆப்ரேஷன் செக்மேட்' நடத்தப்படுகிறது" என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தகுதியற்ற வெளிநாட்டு ஓட்டுநர்கள், லாரிகள் மற்றும் பேருந்துகளை இயக்குவதற்கான உரிமம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் போக்குவரத்துத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த பல மாதங்களாக வணிக வாகனங்களை இயக்கிய கோர விபத்துகளை ஏற்படுத்திய வழக்கில் இந்திய வம்சாவளியினர் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்திய வம்சாவளியினர் பலர் மீது குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2025- ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3,800 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக நடப்பாண்டில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதேபோல், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரவுப்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடுப்பகுதி வரை வரை வாஷிங்டன் டிசி வழியாக 3,414 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2009- ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசால் 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர்.ஜெய்சங்கர், மாநிலங்களவையில் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.

