திறமைசாலிகள் கிடைப்பதில் சிக்கல்: H-1B விசாவுக்கு எதிராக திரண்ட 20 மாகாணங்கள்
H-1B விசா கட்டணமானது கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பதால், திறமையான வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்த நினைக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

Published : December 13, 2025 at 11:26 AM IST
வாஷிங்டன்: புதிய H-1B விசா பெற ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக விதித்துள்ள டிரம்ப்பின் நடவடிக்கையை எதிர்த்து 20 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டோனால்டு டிரம்ப் அமெரிக்க, பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் அவருடைய இது போன்ற முடிவுகளால் மற்ற உலக நாடுகளை பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் H-1B விசா. செப்டம்பர் 21 ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்ல விண்ணப்பிப்பவர்கள் H-1B விசா விண்ணப்பத்துடன் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும்.
H-1B விசா சீர்திருத்தத்தை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு செப்டம்பர் 19 ஆம் தேதி திருத்தம் செய்திருக்கிறது. இந்த விசா திருத்தத்தால் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்ல நினைப்போருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காரணம், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுப் பள்ளிகள் இந்த விசா மூலம் தங்களது நிறுவனங்களுக்கு வெளிநாட்டவரை வேலைக்கு அழைக்கின்றன. தற்போது இந்த விசா கட்டணமானது கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பதால், திறமையான வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்த நினைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் செலவு ஏற்படும் என்பதால் இது நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே டிரம்ப்பின் இந்த முடிவை எதிர்த்து 20 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்திருக்கின்றன. போன்ட்டா மற்றும் மாசசூசெட்ஸ் மாகாணங்கள் முதலில் வழக்கு தொடர்ந்தன. மேலும் அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், மேரிலாந்து, மிச்சிகன், மினசோட்டா, நெவாடா, வட கரோலினா, நியூ ஜெர்சி, நியூயார்க், ஓரிகான், ரோட் தீவு, வெர்மான்ட், வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த அட்டர்னி ஜெனரல்களும் அவர்களுடன் இணைந்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
| இதையும் படிங்க: 'பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே இனி அமெரிக்க குடியுரிமை?' - டிரம்பின் 'தங்க அட்டை' திட்டத்துக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் |
விசா மீது இதுபோன்று கட்டணம் விதிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் போன்ட்டா கூறியுள்ளார். அவர், “உலகின் நான்காவது பெரிய பொருளாதரம் கொண்டதாக கலிபோர்னியா விளங்குகிறது. உலகெங்கிலும் உள்ள திறமையான பணியாளர்கள் எங்கள் நிறுவனங்களில் வேலைக்கு சேரும் போது அது எங்கள் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது” என்று கூறினார்.
மேலும், “டிரம்ப்பின் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் என்ற H-1B விசா கட்டணமானது கலிபோர்னியாவில் உள்ள முதலாளிகள் மற்றும் பிற முக்கிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மீது தேவையற்ற நிதி சுமைகளை உருவாக்குகிறது. இதனால் முக்கிய துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரிக்கிறது” என்றார். மேலும், 2024 - 25 ஆம் கல்வியாண்டில் அமெரிக்க பள்ளிகளில் 74 சதவீத பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் H-1B விசாவையே பயன்படுத்துகின்றனர். இந்த விசா மாற்றத்தால் 2030 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா கிட்டத்தட்ட 86 ஆயிரம் மருத்துவர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

