"ஆயுள் அதிகம், ஆரோக்கியம் குறைவு" - பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் 'லான்செட்' ஆய்வு!
பெண்களுக்கான மருத்துவ அணுகுமுறைகளில் வெறும் பிரசவ காலப் பராமரிப்பை மட்டும் முன்னிறுத்தாமல், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்நாள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

Published : June 1, 2026 at 11:13 AM IST
உலகெங்கிலும் பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்கிறார்கள் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால், அதிக காலம் வாழ்வது மட்டுமே ஒரு மனிதரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான அடையாளம் ஆகிவிடாது என்பதை புரிய வைக்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.
'தி லான்செட் பப்ளிக் ஹெல்த்' (The Lancet Public Health) என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஒரு விரிவான உலகளாவிய ஆய்வு, பெண்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலும், அவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை உடல் வலி, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பிற முடக்கும் நோய்களுடனேயே கழிக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 204 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உயிருக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தாத, ஆனால் அன்றாட வாழ்க்கை தரத்தை மிக மோசமாக பாதிக்கும் நாள்பட்ட நோய்களால் பெண்களே மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதே வேளையில் ஆண்கள் விபத்துக்கள் மற்றும் கடுமையான நோய்களால் குறைவான வயதிலேயே மரணமடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெண்களை துரத்தும் நாள்பட்ட உடல் உபாதைகள்
இந்த ஆய்வின் மூலம், உலகளவில் பெண்களை மிக அதிகமாக துயரத்திற்குள்ளாக்கும் தனிப் பெரும் பாதிப்பாக 'இடுப்பு வலி மற்றும் முதுகு வலி' என தெரியவந்துள்ளது. இது தவிர, மனச்சோர்வு, பதற்றக் கோளாறுகள் (Anxiety), கடுமையான தலைவலி, தசை மற்றும் எலும்பு சார்ந்த குறைபாடுகள் மற்றும் நினைவாற்றல் இழப்பு எனப்படும் டிமென்ஷியா (Dementia) போன்ற பாதிப்புகளும் ஆண்களை விட பெண்களுக்கே மிக அதிகமாக ஏற்படுவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீண்ட ஆயுள் என்பது தானாகவே நல்ல ஆரோக்கியத்தை கொடுத்துவிடாது என்ற உண்மையை இந்த தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன. இது குறித்து டெல்லி சாகேத் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவம் பிரிவின் இயக்குனர் டாக்டர் ரொம்மல் டிக்கூ கூறும்போது, "ஒருவர் நீண்ட காலம் வாழ்வதை மட்டுமே வைத்து அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. பெண்கள் ஆண்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்பது உண்மைதான்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியை நாள்பட்ட உடல் வலி, மனநலப் பாதிப்புகள் மற்றும் அன்றாட செயல்பாடுகளை முடக்கும் பிற நோய்களுடன் தான் போராடிக் கழிக்கிறார்கள்" என்று தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
இளமையிலேயே தொடங்கும் ஆரோக்கிய இடைவெளி
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், ஆண்களுக்கும் பெண்களுக்குமான இந்த ஆரோக்கிய இடைவெளி என்பது வயதான காலத்தில் மட்டும் ஏற்படுவதில்லை. இது பெண்களின் இளம் வயதிலேயே, அதாவது அவர்களின் பதின்பருவத்திலேயே (Adolescence) தொடங்கிவிடுகிறது.
அங்கிருந்து வயது கூடக் கூட இந்த ஆரோக்கியக் குறைபாடுகளின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, பதின்பருவத்தில் தொடங்கும் மனநலப் பாதிப்புகளும், தசை மற்றும் எலும்பு பலவீனங்களும் அவர்கள் வளர்ந்து பெரியவர்காகும் போதும் தொடர்கதையாகவே நீடிக்கின்றன.
பாதிப்புக்கு என்ன காரணம்?
பெண்களுக்கு ஏன் இத்தகைய பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன என்பது குறித்தும் டாக்டர் ரொம்மல் டிக்கூ விளக்கியுள்ளார். இதற்கு பின்னால் பலதரப்பட்ட காரணங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். பெண்களின் உடலில் ஏற்படும் உயிரியல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், தசைநார் கோளாறுகள் மற்றும் சுய எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் (Autoimmune disorders) ஆகியவற்றால் அவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.
இவை அனைத்திற்கும் மேலாக, நம் சமூகத்தில் பெண்கள் சுமக்கும் குடும்ப பொறுப்புகள், குழந்தைகளையும் முதியவர்களையும் கவனித்துக் கொள்ளும் சுமை மற்றும் வேலை அழுத்தங்கள் ஆகியவை அவர்களின் உடல் மற்றும் மன நலனைப் பெருமளவில் பாதிக்கின்றன.
மருத்துவக் கட்டமைப்பில் இருக்கும் பெரிய குறைபாடு
இந்த ஆய்வு முடிவுகள் தற்போதைய மருத்துவ கட்டமைப்பில் இருக்கும் ஒரு பெரிய இடைவெளியையும் சுட்டிக்காட்டுகின்றன. உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகள் பெரும்பாலும் பெண்களின் மகப்பேறு மற்றும் பிரசவ கால ஆரோக்கியத்திற்கு (Reproductive and maternal health) கொடுக்கும் முக்கியத்துவத்தை, அவர்களின் வாழ்நாளை பாதிக்கும் இதுபோன்ற நாள்பட்ட நோய்களுக்கு கொடுப்பதில்லை. இதனால், பெண்களின் ஒட்டுமொத்த நோய் சுமையில் பெரும் பங்கு வகிக்கும் இந்த நாள்பட்ட பிரச்சனைகள் பல நேரங்களில் கவனிக்கப்படாமலேயே போய்விடுகின்றன.
ஆண்களைத் தாக்கும் பாதிப்புகள் என்ன?
இதற்கு நேர்மாறாக, ஆண்கள் எதிர்கொள்ளும் ஆரோக்கியப் பிரச்சனைகள் முற்றிலும் வேறானவையாக இருக்கின்றன. கோவிட்-19 பாதிப்பு, இதயத் தமனி நோய்கள் (Ischaemic heart disease), சாலை விபத்துக்கள் மற்றும் நாள்பட்ட சுவாசப் பைய நோய்கள் போன்றவற்றால் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது அவர்களுக்கு முன்கூட்டியே மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, குடும்பத்திற்காகவும் சமூகத்திற்காகவும் ஓடி ஓடி உழைக்கும் பெண்கள், தங்களின் சொந்த உடல்நலனிலும், குறிப்பாக நாள்பட்ட உடல் வலி மற்றும் மனநலன் சார்ந்த விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது.
அதே நேரத்தில், பெண்களுக்கான மருத்துவ அணுகுமுறைகளில் வெறும் பிரசவ காலப் பராமரிப்பை மட்டும் முன்னிறுத்தாமல், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்நாள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை மருத்துவ துறை உருவாக்க வேண்டும் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.
ஆய்வு:
https://www.thelancet.com/journals/lanpub/article/PIIS2468-2667(24)00053-7/fulltext

