ETV Bharat / health

ஆண்களை விட பெண்களுக்கு தான் உடல் வலி அதிகம்? ஆய்வு சொல்லும் காரணம் இதோ!

உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் முதுகு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். அதே வேளையில், உடலின் அதிகப்படியான எடை கணுக்கால் மற்றும் பாதங்களையே நேரடியாக பாதிக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : October 9, 2026 at 4:34 PM IST

3 Min Read
Choose ETV Bharat

பெண்கள் அடிக்கடி உடம்பு வலி, தலைவலி அல்லது இடுப்பு வலி என்று சொல்வதை இயல்பாக கடந்து செல்லும் சூழல் பல இடங்களில் உண்டு. ஆனால், பெண்கள் அவ்வாறு கூறுவதற்கு பின்னால் தெளிவான அறிவியல் காரணம் உள்ளது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

ஆண்களை விட பெண்களே வாழ்நாள் முழுவதும் கடுமையான உடல் வலியை சந்திக்கிறார்கள் என்பதை உலகளாவிய விரிவான ஆய்வு ஒன்று வெளிக்கொண்டு வந்துள்ளது.

'நேச்சர் மெடிசின்' (Nature Medicine) எனும் சர்வதேச ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆராய்ச்சிக்காக, 118 நாடுகளை சேர்ந்த 5 வயது முதல் 100 வயதிற்கும் மேற்பட்ட 61 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் சுயமுறையீட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன.

மருத்துவமனை பதிவுகளை மட்டும் சார்ந்திருக்காமல், மக்களிடம் நேரடியாக தகவல்களை திரட்டியதன் மூலம் உலகளாவிய உடல் வலி குறித்த துல்லியமான வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்களை அதிகம் தாக்கும் உடல் வலி

ஆய்வில் பரிசீலிக்கப்பட்ட தலை, முகம், கழுத்து, முதுகு, வயிறு, இடுப்பு மற்றும் முழங்கால் உட்பட 11 உடல் பாகங்களிலுமே ஆண்களை விட பெண்களுக்குத்தான் வலியின் தாக்கம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

  • முக வலி: ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு முக பாகங்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு 83 சதவீதம் அதிகமாக உள்ளது.
  • தலைவலி: பெண்கள் தலைவலியால் பாதிக்கப்படும் விகிதம் 74 சதவீதம் அதிகமாக இருக்கிறது.
  • வயிற்று வலி: வயிற்றுப் பகுதியில் ஏற்படும் வலி பெண்களுக்கு 60 சதவீதம் கூடுதலாக உள்ளது.

இத்தகைய கடுமையான பாதிப்புகள் இருந்தபோதிலும், பெண்களுக்கு தேவையான சரியான வலி நிவாரண மருத்துவ சிகிச்சைகள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்பதும், அவர்களின் வலி பல நேரங்களில் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது என்பதும் இந்த ஆய்வின் முக்கியக் கவலையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வயதும் வலியும்: பரவலான நம்பிக்கைக்கு மாறான உண்மைகள்

வயது அதிகரிக்கும் போதுதான் உடலின் வலிகளும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், பெரும்பாலான உடல் வலிகள் 55 வயதிற்கு முன்பே வேகமாக அதிகரித்து, நடுத்தர வயதில்தான் உச்சத்தை அடைகின்றன என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.

உடலின் வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வலியை சந்திக்கின்றன:

வயிறு மற்றும் தலைவலி: வயிற்று வலி மிக சிறிய வயதிலேயே, அதாவது 23 வயதிலேயே உச்சமடைகிறது. அதனை தொடர்ந்து தலைவலி 34 வயதில் உச்சத்தை எட்டுகிறது.

மேல் மற்றும் கீழ் உடல் பகுதிகள்: கழுத்து, தோள்பட்டை, முழங்கை போன்ற எடையை தாங்காத மேல் உடல் பாகங்களின் வலி 59 முதல் 62 வயது வரையிலான இடைப்பட்ட காலத்தில் உச்சமடைந்து, பின்னர் குறைய தொடங்குகிறது. ஆனால் இடுப்பு, முழங்கால், முதுகு போன்ற உடலின் மொத்த எடையையும் தாங்கும் பாகங்களின் வலி வயது கூடக்கூட அதிகரித்து, 75 வயதிற்கு பிறகே உச்சத்தை அடைகிறது.

வளர்ச்சியடையும் நாடுகளை வாட்டும் வலி சுமை

உயர் வருவாய் கொண்ட பணக்கார நாடுகளில்தான் வலி சார்ந்த பாதிப்புகள் அதிகம் என்ற முந்தைய கணிப்புகளை இந்த ஆய்வு தலைகீழாக மாற்றியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்த மக்களே வயதான காலத்தில் கடுமையான உடல் வலியால் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக, பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளில் கீழ் முதுகு வலி இருமடங்கு அதிகமாக உள்ளது.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புகைப்பிடித்தல், உடல் பருமன் மற்றும் குறைந்த வருமானம் போன்றவை வலிக்கு 27 சதவீதம் வரை காரணமாக அமைகின்றன. ஆனால் ஏழை நாடுகளில் இக்காரணிகளின் பங்களிப்பு 12 சதவீதம் மட்டுமே. மாறாக, கடினமான உடலுழைப்பு, தொற்றுநோய்கள் மற்றும் முறையான மருத்துவ வசதியின்மையே அங்குள்ள மக்களின் அதிகப்படியான வலிக்கு முதன்மை காரணியாக இருக்கிறது.

முதுகு வலியும் உடல் பருமனின் தாக்கமும்

உலகளவில் மிகவும் பரவலாக காணப்படும் பாதிப்பாக முதுகு வலி உருவெடுத்துள்ளது. உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் முதுகு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். அதே வேளையில், உடலின் அதிகப்படியான எடை கணுக்கால் மற்றும் பாதங்களையே நேரடியாக பாதிக்கிறது. உடல் பருமன் கொண்டவர்களுக்கு கால் மற்றும் பாதங்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருமடங்காக உயர்கிறது.

உலகளவில் உழைக்கும் வயதில் உள்ள நடுத்தர மக்களையும், குறிப்பாக பெண்களையும், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளையுமே உடல் வலி மிகக் கடுமையாகப் பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. எனவே, பெண்களின் உடல் நலப் புகார்களை அலட்சியப்படுத்தாமல், அவற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் பூர்வமான காரணங்களைப் புரிந்து கொண்டு உரிய கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

ஆய்வு:

https://www.nature.com/articles/s41591-026-04696-w

இதையும் படிங்க:

புத்தகங்களை நேசிக்கும் நபரா நீங்கள்? உங்கள் சிந்தனை திறனை வாசிப்பு எப்படி உயர்த்துகிறது தெரியுமா?

மாதவிடாய் தள்ளிப்போக உண்மை காரணம் இதுதான்! பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!