ETV Bharat / health

மதுவை விட நினைத்தாலும் முடியாதது ஏன்? பின்னணியில் இருக்கும் உளவியல் காரணம் பற்றி தெரியுமா?

ஒரே முயற்சியில் யாராலும் மதுவை நிறுத்திவிட முடிவதில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, தோற்று, மீண்டும் முயற்சிக்கும்போதுதான் இறுதியில் முழுமையாக நிறுத்தும் நிலை சாத்தியமாகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : October 6, 2026 at 12:41 PM IST

3 Min Read
Choose ETV Bharat

- By கௌதம் டெப்ராய்

மது அருந்தும் பழக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதும், அது கல்லீரலை முற்றிலும் பாழ்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதும் அதை அருந்துபவர்கள் உட்பட அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மைதான். "இது எனக்கு வேண்டாம், நான் மதுவை விட்டுவிட வேண்டும்" என்று மனதார நினைத்தாலும், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட பலரால் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர முடிவதில்லை.

"மது உடம்பை கெடுக்கும் என்று தெரிந்துமே ஏன் இவர்களால் அதை நிறுத்த முடியவில்லை?" என்ற கேள்வி பல குடும்பங்களில் ஒரு மிகப்பெரிய வேதனையாகவும் சந்தேகமாகவும் இருக்கிறது.

டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்த நீர் அறிவியல் நிறுவனம் (ILBS) நடத்திய புதிய ஆராய்ச்சி ஒன்று இதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. மதுப்பழக்கம் என்பது வெறும் மனக்கட்டுப்பாடு சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, அது மூளையையும் உடலையும் எந்தளவிற்கு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.

மதுவினால் ஏற்படும் பாதிப்புகள், அதை விட நினைப்பவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் இதிலிருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஆய்வில் நடந்தது என்ன?

டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 3,759 ஆண் நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் கல்லீரல் நோய் மற்றும் தீவிர மதுப்பழக்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள். மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கியும், நோய் ஆபத்தை உணர்த்தியும் கூட, ஆய்வில் பங்கேற்ற 100 பேரில் 78 பேர் (78 சதவீதம்) தொடர்ந்து மது அருந்தி வந்திருப்பது தெரியவந்துள்ளது.

வெறும் 22 சதவீதம் பேரால் மட்டுமே இரண்டு மாதங்களுக்கும் மேலாக மதுவை தொடாமல் இருக்க முடிந்துள்ளது. நீண்ட நாட்களாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கே அதை நிறுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 77 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாரம் குறைந்தது மூன்று முறையாவது மது அருந்துபவர்களாக இருந்தனர்.

அறிந்தும் விலக முடியாமல் போவது ஏன்?

"மது குடித்தால் கல்லீரல் கெட்டுப்போகும்" என்பது நோயாளிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. உண்மையில், தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்த நோயாளிகளுக்குத்தான் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வும், அதை நிறுத்த வேண்டும் என்ற விருப்பமும் அதிகமாக இருந்தது. ஆனால், விருப்பம் மட்டும் இருந்தால் போதாது, உடலின் சார்புநிலை அதற்கு இடம் தர வேண்டும்.

தொடர்ந்து மது அருந்தும்போது, அது மூளையின் சில முக்கிய பகுதிகளை மாற்றியமைக்கிறது. இதனால், மது அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்தும் திறனை மூளை இழந்துவிடுகிறது. இதன் காரணமாக, "நாளை முதல் குடிக்கக் கூடாது" என்று அவர்கள் நினைத்தாலும், அவர்களின் உடலும் மூளையும் கேட்கும் தீவிரத் தேவையை அவர்களால் சமாளிக்க முடிவதில்லை.

பலமுறை முயற்சிப்பவர்களுக்கே வெற்றி

இந்த ஆய்வில் ஒரு முக்கியமான விஷயம் தெரியவந்துள்ளது. மதுப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்தியவர்கள், அதற்கு முன்பாக பலமுறை அதை கைவிட முயற்சி செய்து தோற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதாவது, ஒரே முயற்சியில் யாராலும் மதுவை நிறுத்திவிட முடிவதில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, தோற்று, மீண்டும் முயற்சிக்கும்போதுதான் இறுதியில் முழுமையாக நிறுத்தும் நிலை சாத்தியமாகிறது. ஆனால், தொடர்ந்து குடித்து கொண்டே இருந்தவர்களில் பலர், தங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட அதை நிறுத்த முயற்சியே செய்ததில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

உயிருக்கு ஆபத்து வரும்போது பிறக்கும் மாற்றம்

கல்லீரல் நோய் மிகவும் தீவிரமடைந்து, உயிருக்கே ஆபத்து என்ற நிலை வரும்போதுதான் பலருக்கு பயம் வந்து மதுவை நிறுத்துகிறார்கள். நோய் முற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கட்டத்தில், அந்த பயமே அவர்களை மதுவிலிருந்து பிரிக்கும் காரணியாக மாறுகிறது. ஆனால், அவ்வளவு தூரம் நோய் முற்றுவதற்கு முன்பே எச்சரிக்கையாக இருப்பதுதானே புத்திசாலித்தனம்.

பெற்றோர்களின் கடமையும் அரசாங்கத்தின் பொறுப்பும்

இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர் டாக்டர் எஸ். பாலி, "மது அருந்துவது என்பது ஒருமுறை தொடர்ந்தால் மீண்டும் மீண்டும் தூண்டும் பழக்கம். அதனால் இதில் வீழ்ந்த பிறகு மீட்பது கடினம்" என்று கூறுகிறார்.

இதிலிருந்து தப்பிக்க அவர் சில முக்கிய யோசனைகளை வழங்குகிறார்:

  • குழந்தைகள் வளரும்போதே மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அதனால் குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் பெற்றோர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
  • குஜராத், பீகார் போன்ற மாநிலங்களைப் போல மற்ற மாநிலங்களிலும் மது விற்பனையை கட்டுப்படுத்த கடுமையான விதிகளை கொண்டு வர வேண்டும்.
  • மதுவை நிறுத்த நினைப்பவர்களுக்குக் வெறும் அறிவுரை மட்டும் போதாது, அவர்களின் மூளை மற்றும் உடல் சார்ந்த அழுத்தத்தை குறைக்க முறையான மருத்துவ சிகிச்சையும், குடும்பத்தின் ஆதரவும் தேவை.

இதையும் படிங்க:

பிரபல நிறுவன சீரக தூளில் பூச்சிக்கொல்லி? உங்கள் வீட்டில் இந்த பாக்கெட் இருக்கானு செக் பண்ணுங்க!

ஸ்மார்ட்போன் பழக்கத்தால் சீரழிகிறதா இளைஞர்களின் ஆரோக்கியம்? 'தி லான்செட்' ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்!