குளிர் சீசனில் அதிகரிக்கும் மைக்ரேன் தலைவலி: தடுக்க என்ன செய்ய வேண்டும்?
குளிர்காலத்தில் அதிகம் உட்கொள்ளப்படும் காஃபின், சாக்லேட் மற்றும் ஆல்கஹால் போன்றவை சிலருக்கு தலைவலியை தூண்டலாம்.

Published : December 14, 2025 at 10:14 AM IST
குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. ஆனால், சிலருக்கு இந்த காலநிலை மைக்ரேன் (Migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலியை தீவிரமாக்குகிறது. அதிலும், ஏற்கனவே மைக்ரேன் பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர்காலம் சவாலானது தான்.
குளிர்ந்த காற்று, வெளிச்சம் குறைவது, மற்றும் நமது அன்றாட பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் கூட இந்த வலியைத் தூண்டி நிலைமையை மோசமாக்கும். அந்த வகையில், குளிர்காலத்தில் ஒற்றைத் தலைவலி ஏன் மோசமாகிறது? அதனை எப்படி தடுப்பது போன்றவற்றை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். குளிர்கால ஒற்றைத் தலைவலிக்கு முக்கியமாக மூன்று காரணிகள் பங்களிக்கின்றன என்கிறது NCBI ஆய்வு.

குளிர்ந்த வானிலை மற்றும் தட்பவெப்ப மாற்றங்கள்: குளிர்ந்த காற்று படும்போது, குறிப்பாக தலை மற்றும் கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இது மூளையில் ரத்த ஓட்டத்தை பாதித்து தலைவலியை ஏற்படுத்தலாம். வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முக்கிய தூண்டுதலாக (Trigger) அமைகிறது.
குளிர் காரணமாக கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகள் இறுக்கமடைவதும் (Muscle Tension) தலைவலிக்கு வழிவகுக்கும். சூடாக்கப்பட்ட உட்புறங்களில் உள்ள வறண்ட காற்று நீரிழப்புக்கு வழிவகுக்கிறது, இது தலைவலிக்கான ஒரு பொதுவான காரணமாகும்.
வைட்டமின் D குறைபாடு: குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாகக் கிடைப்பதால், உடலின் வைட்டமின் D அளவு குறைகிறது. இது மூளையின் செரோடோனின் (Serotonin) அளவை பாதிக்கலாம். செரோடோனின் ஏற்றத்தாழ்வுகள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் என்பது Vitamin D Deficiency and Its Correlates in Migraine Patients என்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருப்பதால், மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. இது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் மிக முக்கியமான காரணியாகும். பகல் குறுகியதாக இருப்பதாலும், மன அழுத்தம் (Stress) அதிகரிப்பதாலும் தூக்க முறைகளில் மாற்றம் ஏற்படலாம். சீரற்ற தூக்கம் தலைவலியைத் தூண்டும்.

விடுமுறை காலங்கள் மற்றும் பருவகால பாதிப்புக் கோளாறு (Seasonal Affective Disorder - SAD) போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் ஒற்றைத் தலைவலி தாக்குதல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். குளிர்காலத்தில் அதிகம் உட்கொள்ளப்படும் சில உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் , காஃபின், சாக்லேட் மற்றும் ஆல்கஹால் போன்றவை சிலருக்குத் தலைவலியைத் தூண்டலாம்.
தடுக்க வழி என்ன? இந்தக் காரணிகளைக் கையாள்வதன் மூலம் குளிர்கால ஒற்றைத் தலைவலியை நம்மால் திறம்பட நிர்வகிக்க முடியும்
- தாகம் எடுக்கவில்லை அல்லது குளிர்ந்த நீரை குடிக்க முடியாதவர்கள், மூலிகை டீ (Herbal Tea) அல்லது சூப் போன்றவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இது நீரிழப்பைத் தடுக்கும்.
- சூரிய ஒளியில் அதிக நேரம் செலவழிக்க முயற்சி செய்யுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின் D சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
- வெளியில் செல்லும்போது தொப்பி மற்றும் ஸ்கார்ஃப் போன்றவற்றை அணிந்து, திடீர் குளிர் வெளிப்பாட்டிலிருந்து தலை மற்றும் கழுத்தைப் பாதுகாக்கவும். வீட்டின் உட்புறத்தில் ஈரப்பதத்தைப் பராமரிக்க ஹியூமிடிஃபையர் (Humidifier) பயன்படுத்தலாம்.
- வார இறுதி நாட்கள் உட்பட தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுந்திருக்கப் பழகுங்கள்.
- யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
ஒற்றைத் தலைவலி அடிக்கடி வந்தாலோ அல்லது தீவிரமாக இருந்தாலோ, சுய வைத்தியம் செய்யாமல் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

